அமெரிக்க கிரீன் கார்டு பெற 179 ஆண்டுகள் காத்திருப்பு? இந்திய வல்லுநர்களுக்கு பேரதிர்ச்சி தகவல்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு சார்ந்த கிரீன் கார்டு (நிரந்தர குடியுரிமை) பெற விரும்பும் உயர் தகுதி படைத்த இந்திய வல்லுநர்களுக்கு NFAP (National Foundation for American Policy) வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2026-ஆம் ஆண்டு ஜனவரி அல்லது அதற்குப் பிறகு வேலைவாய்ப்பு சார்ந்த கிரீன் கார்டுக்காக விண்ணப்பிக்கும் இந்தியர்களுக்கு, சில குறிப்பிட்ட பிரிவுகளில் காத்திருப்பு காலம் 179 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
காத்திருப்பு காலம்
பிரிவுகள் வாரியாக இந்தியர்களுக்கான காத்திருப்பு காலம்
அமெரிக்க கிரீன் கார்டு விண்ணப்பக் காத்திருப்போர் பட்டியலில் உள்ள மொத்த மக்களில் 79% பேர் இந்தியர்கள் ஆவர்.
தற்போது சுமார் 9,96,599 இந்தியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் இந்த பட்டியலில் சிக்கியுள்ளனர்.
அதன்படி, அறிவியல், கலை, வணிகத்தில் அசாத்திய திறமை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் EB-1 பிரிவில் இருப்பவர்களுக்கு 5 ஆண்டுகள் என கணிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக முதுகலை மற்றும் உயர் கல்வித் தகுதி படைத்தவர்களுக்கு வழங்கப்படும் EB-2 இருப்பவர்களுக்கு 179 ஆண்டுகள் ஆகுமாம்.
அடுத்ததாக EB-3 பிரிவில் இருக்கும் இளங்கலை மற்றும் திறமையான தொழிலாளர்களுக்கு 38 ஆண்டுகள் ஆகும்.
காரணம்
நீண்ட காத்திருப்புக்கு என்ன காரணம்?
அமெரிக்கா ஆண்டுதோறும் சுமார் 1,40,000 வேலைவாய்ப்பு சார்ந்த கிரீன் கார்டுகளை வழங்குகிறது.
ஆனால், எந்த ஒரு தனி நாட்டிற்கும் 7 சதவீதத்திற்கு மேல் வழங்கக்கூடாது என்ற சட்ட வரம்பு உள்ளது.
இதனால் சிறிய நாடுகளுக்கு இணையாக இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டினரும் குறைந்த எண்ணிக்கையிலேயே பயன்பெற முடிகிறது.
கொரோனா காலத்திற்குப் பிறகு கூடுதலாக 2,80,000 விசாக்கள் வேலைவாய்ப்பு பிரிவுக்கு மாற்றப்பட்ட போதிலும், கடந்த 5 ஆண்டுகளில் இந்த விசா பாக்கி 20.6% அதிகரித்துள்ளது.
அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவின் முன்னணி தொழில்நுட்பத் திறமையாளர்களைத் தங்களுடன் தக்கவைத்துக்கொள்வதற்கு இந்தக் கடுமையான விசா விதிகளும் நீண்ட காத்திருப்புக் காலமும் பெரும் சவாலாக மாறியுள்ளதாக இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.