அவசரநிலையை அறிவித்த அமெரிக்க விமானம் மாயமானதால் பரபரப்பு
தெற்கு கரோலினாவில் அமெரிக்க மரைன் கார்ப்ஸ் போர் விமானம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை(செப் 17) காணாமல் போனது. காணாமல் போன பல மில்லியன் டாலர் மதிப்பிலான அந்த விமானத்தை கண்டுபிடிக்க உதவுமாறு அமெரிக்க ராணுவ அதிகாரிகள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வடக்கு சார்லஸ்டன் பகுதியில் பறந்து கொண்டிருந்த F-35 மின்னல் II ஜெட் விமானத்தில் தொழிலநுட்ப கோளாறு ஏற்பட்டது. எனினும், அதை இயக்கி கொண்டிருந்த மரைன் கார்ப்ஸ் விமானி அதை பாதுகாப்பாக வெளியேற்றினார். ஆனால், அதற்கு பிறகு அந்த விமானம் திடீரென்று மாயமாகிவிட்டது.
'விமானத்தைக் கண்டுபிடித்து தாருங்கள் என்று பொதுமக்களிடம் கேட்பது சரியா?'
இதனையடுத்து, முன்னணி கூட்டுத் தளமான சார்லஸ்டன் உள்ளூர்வாசிகளிடம் உதவி கேட்டுள்ளது. "F-35 விமானத்தை கண்டறிய உதவும் ஏதேனும் தகவல் உங்களிடம் இருந்தால், தயவு செய்து பேஸ் டிஃபென்ஸ் ஆபரேஷன்ஸ் சென்டரை அழைக்கவும்" என்று முன்னணி கூட்டுத் தளமான சார்லஸ்டன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பேசி இருக்கும் உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் நான்சி மேஸ், "எப்படி F-35 ஐ இழந்தீர்கள்? கண்காணிப்பு சாதனம் ஏன் அதில் இல்லை. ஒரு ஜெட் விமானத்தைக் கண்டுபிடித்து தாருங்கள் என்று பொதுமக்களிடம் கேட்பது சரியா?" என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த ஜெட் விமானத்தின் மதிப்பு 80 மில்லியன் டாலர்கள்(665.70 கோடி ரூபாய்) என்பது குறிப்பிடத்தக்கது.