அமெரிக்காவில் புதிய 10% இறக்குமதி வரி அமல்: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் ட்ரம்ப்பின் அடுத்தகட்ட அதிரடி
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்திருந்த "வரையறுக்கப்படாத" இறக்குமதி வரிகள் சட்டவிரோதமானது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, ட்ரம்ப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி புதிய வரியை விதிப்பதாக அறிவித்தார். அவர் தனது அறிவிப்பில் 15% வரி விதிப்பதாக கூறிய நிலையில், தற்போது அமெரிக்க கஸ்டம்ஸ் இன்று முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு 10 சதவீத வரி அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.
காரணம்
15% வரி ஏன் 10% ஆனது?
முதலில் அனைத்து நாடுகளுக்கும் 10 சதவீத வரி விதிக்கப்படுவதாக அறிவித்த ட்ரம்ப், அடுத்த நாளே அதை 15 சதவீதமாக (சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அளவு) உயர்த்துவதாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இருப்பினும், இன்று பிப்ரவரி 24 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய நடைமுறையில் 10 சதவீத வரி மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இந்த 5 சதவீத வித்தியாசம் குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், "15 சதவீத உயர்வு பின்னர் வரும்" என்று தெரிவித்துள்ளார்.
நிபந்தனை
புதிய விதியின் நிபந்தனைகள்
இந்த புதிய வரி விதிப்பு 150 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இதனை நீட்டிக்க வேண்டுமானால் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கட்டாயம். பழைய IEEPA வரிகள் (10% முதல் 50% வரை இருந்தது) தற்போது முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த திடீர் மாற்றங்களால் உலக வர்த்தக சந்தையில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக, இதற்கிடையில் சுமார் 175 பில்லியன் டாலர் வரை வரிப்பணத்தை திருப்பி அளிக்க வேண்டிய சூழல் அமெரிக்க அரசுக்கு ஏற்படலாம் என்றும் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.