Page Loader
அமெரிக்காவில் 3 வெவ்வேறு இடங்களில் மீண்டும் துப்பாக்கி சூடு
2022இல், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் 44,000க்கும் அதிகமானோர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளனர்

அமெரிக்காவில் 3 வெவ்வேறு இடங்களில் மீண்டும் துப்பாக்கி சூடு

எழுதியவர் Sindhuja SM
Jan 24, 2023
04:27 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் அயோவா மாகாணங்களில் நேற்று(ஜன 24) நடந்த மூன்று வெவ்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் இரண்டு மாணவர்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். கலிபோர்னியாவில் நடந்த வெறித்தனமான துப்பாக்கி சூடு நடைபெற்று 2 நாட்கள் கூட முடியாத நிலையில் இது நிகழ்ந்திருப்பது அச்சத்தை கிளப்பி இருக்கிறது. இந்த சம்பவங்களின் சந்தேக நபர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அமெரிக்காவில் துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் கடைபிடிக்கப்படாமல் இருப்பதால், துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் சாதாரணமாகி வருகின்றன. கடந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவில் 647 துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. 2022இல், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் 44,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஆவர்.

அமெரிக்கா

கலிபோர்னியாவில் நடந்த இரு துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர்

மூன்று சம்பவங்களில், இரண்டு வடக்கு கலிபோர்னியாவில் உள்ள ஹாஃப் மூன் பேயின் பண்ணைகளில் நடந்துள்ளன. ஒரு சம்பவம் அயோவாவின் டெஸ் மொயின்ஸில் உள்ள ஒரு பள்ளியில் நடந்திருக்கிறது. மவுண்டன் மஷ்ரூம் பண்ணை மற்றும் ஹாஃப் மூன் பேயில் உள்ள ரைஸ் டிரக்கிங்-சாயில் பண்ணை ஆகியவற்றில் நடந்த தாக்குதல்களில் ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும், மூவர் படுகாயமடைந்தனர். இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. டெஸ் மொயின்ஸில், இளைஞர்களுக்கு கல்வி ஆலோசனை வழங்கும் திட்டமான 'ஸ்டார்ட்ஸ் ரைட் ஹியர்' என்ற நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு ஊழியர் படுகாயமடைந்தார்.