LOADING...
ரஷ்ய ராணுவத்தில் 50 இந்தியர்கள் இன்னும் தவிப்பு; 26 பேர் உயிரிழப்பு
இந்தியர்களின் நிலை குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது

ரஷ்ய ராணுவத்தில் 50 இந்தியர்கள் இன்னும் தவிப்பு; 26 பேர் உயிரிழப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Dec 22, 2025
11:03 am

செய்தி முன்னோட்டம்

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்திற்காக போராட கட்டாயப்படுத்தப்பட்ட அல்லது பணியமர்த்தப்பட்ட இந்தியர்களின் நிலை குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதுவரை மொத்தம் 202 இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 7 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் தீவிர ராஜதந்திர முயற்சிகளால் இதுவரை 119 இந்தியர்கள் ராணுவ சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர். மீதமுள்ள 50 இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்துள்ளார்.

விவரங்கள்

உயிரிழந்தவர்களின் உடல் மீட்பு

உயிரிழந்தவர்களில் 10 பேரின் உடல்கள் இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் 2 பேருக்கு ரஷ்யாவிலேயே இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. அடையாளம் காண்பதற்காக 18 குடும்பத்தினரின் டிஎன்ஏ (DNA) மாதிரிகள் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதிக சம்பளம், ரஷ்ய குடியுரிமை போன்ற ஆசை வார்த்தைகளைக் கூறி சுற்றுலா மற்றும் மாணவர் விசாக்களில் சென்ற இந்திய இளைஞர்களை ஏஜெண்டுகள் ஏமாற்றிப் போர்க்களத்திற்கு அனுப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது. மத்திய அரசு தொடர்ந்து ரஷ்ய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க முன்னுரிமை அளித்து வருவதாக தெரிவித்துள்ளது. அதே சமயம், இதுபோன்ற போர்க்கள பணிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement