
வீடு வாங்கியதற்கு முத்திரை வரி செலுத்த தவறியது அம்பலமானதால் பிரிட்டன் துணைப் பிரதமர் ராஜினாமா
செய்தி முன்னோட்டம்
பிரிட்டனின் துணைப் பிரதமர் ஏஞ்சலா ரேனர், தான் வாங்கிய வீடு தொடர்பான வரிச் சர்ச்சையில், அமைச்சர்களுக்கான நடத்தை விதிகளை மீறியதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த வாரம், ஹோவ் நகரில் தான் வாங்கிய £800,000 மதிப்பிலான அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு, சரியான முத்திரை வரியைச் செலுத்தத் தவறியதை அவர் ஒப்புக்கொண்டிருந்தார். இதனால், £40,000 வரி குறைபாடு ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் கீத் ஸ்டார்மருக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில், இந்தத் தவறுக்கு முழுப் பொறுப்பேற்பதாக ரேனர் குறிப்பிட்டுள்ளார். நல்லெண்ணத்துடன் செயல்பட்டாலும், அவர் மேலும் விரிவான வரி ஆலோசனை பெற்றிருக்க வேண்டும் என்பதை அவர் ஏற்றுக்கொண்டார்.
நடத்தை விதி
ரேனர் நேர்மையுடன் செயல்பட்டாலும் நடத்தை விதி மீறல்
லாரி மேக்னஸ் என்ற சுயாதீன ஆலோசகர் நடத்திய விசாரணையில், ரேனர் நேர்மையுடன் செயல்பட்ட போதிலும், அமைச்சர்களுக்கான நடத்தை விதியை மீறியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது. ரேனரின் இந்த திடீர் ராஜினாமா அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வரி ஏய்ப்பு குறித்துப் பகிரங்கமாக விமர்சித்து வந்த அவர், இப்போது அதே விவகாரத்தில் சிக்கியுள்ளார். இது குறித்துக் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் கெமி படேனோச், ரேனரின் இந்தச் செயல் பாசாங்குத்தனம் என்று விமர்சித்துள்ளார். அரசாங்கப் பதவியிலிருந்து மட்டுமல்லாமல், தொழிலாளர் கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்தும் ரேனர் விலகியுள்ளார். இது, கட்சியின் எதிர்காலத் தலைமைக்கு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.