புதிதாக 200 பணியாளர்களை பணிநீக்கம் செய்யவிருக்கும் உபர் நிறுவனம்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த உபர்(Uber) நிறுவனமானது தங்களது பணியமர்த்தல் பிரிவில் 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவிருப்பதாக அறிவித்திருக்கிறது. இது அந்நிறுவனத்தின் பணியமர்த்தல் பிரிவில் வேலை பார்த்து வரும் ஊழியர்களில் 35% ஆகும்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் தங்களுடைய சரக்கு சேவைப் பிரிவில் 150 ஊழியர்களை உபர் நிறுவனம் பணிநீக்கம் செய்ததுடன், இந்த ஆண்டு மட்டும் தங்களுடைய 32,700 பணியாளர் எண்ணிக்கையில் 1% ஊழியர்களைப் பணிநீக்கம் செய்திருக்கிறது.
இந்த 2023-ம் ஆண்டு முடிவுக்குள் லாபகரமான நிறுவனமாக தங்கள் நிறுவனம் மாறும் என்று உபர் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உபர்
உபரின் முந்தைய பணிநீக்க நடவடிக்கைகள்:
கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கிய பிறகு தங்களுடைய ஊழியர்களில் 17% பேரை இது வரை உபர் நிறுவனம் பணிநீக்கம் செய்திருக்கிறது.
2020-ம் ஆண்டு, முதன் முதலாக 3,500 ஊழியர்களை ஜூம் கால் மூலமாகவே பணிநீக்கம் செய்தது அந்நிறுவனம். அதனைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு மே மாதம், மேலும் 3,000 ஊழியர்களைப் அந்நிறுவனம் பணிநீக்கம் செய்தது.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் ஒரு நாளுக்கு சராசரியாக 24 மில்லியன் கேப் முன்பதிவுகளைப் உபர் நிறுவனம் பெற்றிருக்கிறது. இது கடந்த ஆண்டின் கடைசி காலாண்டை விட 5% அதிகமாகும்.
மேலும், அடுத்த காலாண்டில் ஒட்டுமொத்தமாக 34 பில்லியன் மதிப்புடைய முன்பதிவுகள் பதிவாகும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.