Loading...
ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு விலக்கு அளிக்கும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்து; இந்தியாவிற்கு நிம்மதி
கிரஹாம் சட்டத்தின் கீழ் ரஷ்ய எண்ணெய் மீதான தடைகளை அதிபர் டிரம்ப் விலக்கியுள்ளார்.

ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு விலக்கு அளிக்கும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்து; இந்தியாவிற்கு நிம்மதி

எழுதியவர் Vasuki
Oct 17, 2026
12:39 pm

செய்தி முன்னோட்டம்

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகள் மீது விதிக்கப்படவிருந்த கடுமையான தடைகள் மற்றும் சுங்க வரிகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்காலிக விலக்கு அளித்து அதிகாரப்பூர்வ நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவின் தேசிய நலனைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவித்துள்ள டிரம்ப், கிரஹாம் சட்டத்தின் (Graham Act) பிரிவு 115-ஐ இதற்காகப் பயன்படுத்தியுள்ளார். இன்னும் இரு தினங்களில் அமலுக்கு வரவிருந்த இந்தத் தடைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துவரும் இந்தியாவுக்கு மிகப்பெரிய நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

வரி விலக்கு

கிரஹாம் சட்டத்தின் அச்சுறுத்தலும் டிரம்பின் விலக்கும்

தெற்கு கரோலினா செனட்டர் லிண்ட்சே கிரஹாம் பெயரில் உருவாக்கப்பட்ட கிரஹாம் சட்டம், உக்ரைன் போருக்கு ரஷ்யா நிதி திரட்டுவதைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டது.

இதன்படி, மாஸ்கோ மீதான தடைகள் மட்டுமின்றி, ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வாங்கும் சீனா, இந்தியா உள்ளிட்ட முதல் ஐந்து முக்கிய நாடுகள் மீது 100 சதவீதம் வரை கூடுதல் வரிகளை விதிக்க அதிபருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

இச்சட்டப்பிரிவுகள் 112 மற்றும் 113-ன் கீழ் விதிக்கப்படவிருந்த அனைத்து வரிகளையும் தற்போது ரத்து செய்வதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த வரிவிலக்கு அமலில் இருக்கும் என்பதால், இந்தியப் பொருட்கள் மற்றும் எண்ணெய் வர்த்தகத்திற்கு வரவிருந்த கூடுதல் சுமை முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டுள்ளது.

ரஷ்ய டீசல் ஒப்பந்தமும் 

உலகளாவிய எரிசக்தி முடிவு

சமீபத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசிய டிரம்ப், சர்வதேச எரிசக்தி விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரஷ்யாவிடமிருந்து உடனடியாக 3 லட்சம் டன்களும், தொடர்ந்து நவம்பரில் 5 லட்சம் டன்களும் என மொத்தம் லட்சக்கணக்கான டன் டீசலை அமெரிக்கா கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்ததாக அறிவித்திருந்தார்.

அமெரிக்க எரிசக்தி ஏற்றுமதியை முடக்கினால் உலகளவில் பெரும் தாக்கம் ஏற்படும் என்பதால், உலக சந்தையைச் சமநிலைப்படுத்தவும் அமெரிக்க விவசாயிகளுக்கு உதவவுமே இந்த முடிவை எடுத்ததாக டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்.

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த முக்கிய விலக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT