
துருக்கியில் சிகிச்சைப்பெறும் குழந்தை-சென்னைக்கு அழைத்துவர முதல்வர் ரூ.10 லட்சம் நிதியுதவி
செய்தி முன்னோட்டம்
துருக்கி நாட்டில் சிகிச்சை பெற்று வரும் காஞ்சிபுரம் மாவட்டத்தினை சேர்ந்த 2 வயது பெண் குழந்தையை சென்னைக்கு அழைத்து வர தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்த செய்திக்குறிப்பில், கடந்த செப்டம்பர் 7ம் தேதியன்று தமிழ்நாடு மாநிலம் காஞ்சிபுரத்தினை சேர்ந்த மனோஜ் என்பவர் தனது 2 வயது மகளுடன் அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து சென்னைக்கு பயணம் செய்துள்ளார்.
அப்போது திடீரென அவரது குழந்தையான சந்தியாவிற்கு கடும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் விமானம் அவசர அவசரமாக துருக்கி நாட்டில் தரையிறக்கப்பட்டுள்ளது.
பின்னர். 'இஸ்தான்புல் மெடிக்கானா' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆம்புலன்ஸ்
2 வயது குழந்தை ஏர்-ஆம்புலன்ஸ் மூலம் பாதுகாப்பாக சென்னைக்கு கொண்டு வர ஏற்பாடு
இந்த அவசரக்கால மருத்துவ சிகிச்சையில் தங்கள் கையிருப்பு பணம் அனைத்தும் செலவான நிலையில், அந்த குழந்தையை மேல் சிகிச்சைக்காக தமிழகம் அழைத்துவர மருத்துவர்களிடம் பெற்றோர் ஆலோசனை கேட்டுள்ளனர்.
குழந்தை சந்தியாவிற்கு கடுமையான மூச்சு திணறல் இருப்பதால் அவர் மருத்துவ கண்காணிப்பில், சுவாச கருவிகளோடு தான் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், மருத்துவர்கள் கூறிய மருத்துவ வசதிகளோடு தங்கள் மகளை தமிழ்நாடு அழைத்து வர உதவுமாறு பெற்றோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.
இந்த கோரிக்கையினை ஏற்ற தமிழ்நாடு முதல்வர், ஏர்-ஆம்புலன்ஸ் மூலம் அந்த குழந்தையை சென்னைக்கு அழைத்து வர ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும்.