அட்லான்டிக் பெருங்கடலில் டைட்டானிக் கப்பலைக் காணச் சென்ற நீர்மூழ்கி 5 பேருடன் மாயம்
அமெரிக்காவில் வடக்கு அட்லாண்டிக் கடலில் காணாமல் போன நீர்மூழ்கியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஓஷன்கேட் என்ற நிறுவனம் டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளை நீர்மூழ்கியில் கூட்டியச் சென்று காட்டும் வகையிலான புதிய சுற்றுலா திட்டம் ஒன்றைத் தொடங்கியது. இதற்கான கட்டணமாக 2,50,000 டாலர்களை நிர்ணயித்திருக்கிறது அந்நிறுவனம். இந்த சுற்றுலா பயணத்திற்காக டைட்டன் என்ற 23,000 பவுண்டுகள் எடை கொண்ட நீர்மூழ்கி ஒன்றையும், போலார் பிரின்ஸ் என்ற கப்பலையும் பயன்படுத்தியிருக்கிறது ஓஷன்கேட் நிறுவனம். டைட்டானிக் மூழ்கிய இடத்திற்கு போலார் பிரின்ஸ் கப்பலில் சென்று, அங்கே நீர்மூழ்கியின் மூலம் கடலின் ஆழத்திற்குச் செல்வது தான் திட்டம். ஆனால், கடலின் ஆழத்திற்குச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி சில மணி நேரங்களிலேயே காணாமல் போயிருக்கிறது.
தேடுதல் பணிகள் தீவிரம்:
ஜூன் 18-ம் தேதி காலை நடைபெற்ற இந்த சம்பவத்தையடுத்து, இன்னும் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த நீர்மூழ்கியில் பிரிட்டிஷ் பணக்காரர் ஹமிஷ் ஹார்டிங், பிரெஞ்சு கடற்படை வீரர் பால்-ஹென்றி நார்கோலெட் உள்ளிட்ட 5 பேர் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த நீர்மூழ்கியானது ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒருமுறை எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் உதவியுடன் கடல்பரப்பில் இருக்கும் போலார் பிரின்ஸ் கப்பலுக்கு சமிக்ஞை அனுப்பும். நீரில் மூழ்கி 1.45 மணிநேரம் கழித்து டைட்டானிக்கின் மேலே இருந்த போது கடைசியாக சமிக்ஞை அனுப்பியிருக்கிறது. அதன் பிறகு அதனிடமிருந்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. சுவாசிப்பதற்கு 96 மணி நேர ஆக்ஸிஜனைக் கொண்டிருக்கும் அந்த நீர்மூழ்கியை அமெரிக்க மற்றும் கனட படையினர் இணைந்து தேடி வருகின்றனர்.