டைட்டானிக் கப்பலைக் காணச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி வெடித்து சிதறியதாக அறிவிக்கப்பட்டது
அமெரிக்காவில் வடஅட்லாண்டிக் கடலில் டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைக் காணச் சென்ற டைட்டன் நீர்மூழ்கியானது வெடித்து சிதறியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அமெரிக்க நேரப்படி ஜூன் 18-ல் காணாமல் போன அந்த நீர்மூழ்கியை தேடும் பணிகள் கடந்த நான்கு நாட்களாக இடைவிடாமல் நடைபெற்று வந்தன. அந்த நீர்மூழ்கியில் ஐந்து பேர் வரை பயணம் செய்திருக்கும் நிலையில், அவசர காலத்தில் பயன்படுத்தும் வகையில் 96 மணி நேரத்திற்கான ஆக்ஸிஜனைக் அந்த நீர்மூழ்கி கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. டைட்டன் நீர்மூழ்கி காணாமல் சென்று 96 மணி நேரத்தைக் கடந்திருக்கும் நிலையில், அதில் பயணம் செய்தவர்கள் உயிர் பிழைத்திருக்கும் வாய்ப்பு இனி மிகவும் அரிது. இந்த நிலையில் தான் அந்த நீர்மூழ்கி வெடித்து சிதறியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
யார் யார் பயணம் செய்தது? எப்படிக் கண்டறிந்தார்கள்?
அமெரிக்க கடற்படையினர் தேடுதல் நடத்திக் கொண்டிருந்த போது அந்த டைட்டன் நீர்மூழ்கியின் உடைந்து சிதறிய துண்டு ஒன்று அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. இந்த உடைந்த துண்டானது டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்திலிருந்து 1,600 மீட்டர்கள் தொலைவில் கிடைத்திருக்கிறது. இந்த சிதறிய துண்டை மேலும் ஆராய்ந்த பிறகு, அது டைட்டன் நீர்மூழ்கியின் பாகமாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர் அதிகாரிகள். காணாமல் போன டைட்டன் நீர்மூழ்கியில், பிரிட்டனைச் சேர்ந்த ஹமிஷ் ஹார்டிங், பிரான்ஸைச் சேர்ந்த கடல் நிபுணரான பால்-ஹென்றி நார்கோலெட், இந்த ஆழ்கடல் சுற்றுலாவை நடத்தி வரும் ஓஷன்கேட் நிறுவனத்தின் சிஇஓ ஸ்டாக்டன் ரஷ், பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபரான ஷசாதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலைமான் தாவூத் ஆகியோர் பயணம் செய்திருக்கின்றனர்.