
ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரித்தது தாய்லாந்து
செய்தி முன்னோட்டம்
ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் மசோதாவை அங்கீகரிப்பதற்கான வாக்களிப்பு இன்று தாய்லாந்து நாடாளுமன்றத்தில் நடந்தது.
இந்த மசோதாவுக்கு ஆதரவளிக்கும் வகையில் பெரும்பாலான தாய்லாந்து எம்பிக்கள் வாக்களித்ததை அடுத்து, ஒரே பாலின திருமண சட்டத்தை இயற்றுவதற்கான அனைத்து தடைகளையும் தாய்லாந்து தாண்டியுள்ளது
இதனையடுத்து, ஒரே பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கிய முதல் தென்கிழக்கு ஆசிய நாடாக தாய்லாந்து உருவெடுத்துள்ளது.
LGBTQ+ சமூகத்தினரை பெருமளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நாடாக தாய்லாந்து பார்க்கப்பட்டாலும், திருமண சமத்துவச் சட்டத்தை நிறைவேற்ற பல தசாப்தங்களாக அந்நாட்டில் உள்ள குயர் சமூகத்தினர் போராடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்தில் உள்ள பெரும்பாலான மக்கள் பழமைவாத மதிப்புகளைக் கொண்டுள்ளதால் இந்த போராட்டம் அவர்களுக்கு இன்னும் கடினமாக இருந்தது.
தாய்லாந்து
அடுத்த 120 நாட்களில் அமலுக்கு வரும் ஒரே பாலின திருமண சட்டம்
தாய்லாந்தின் அரசாங்கமும் அரசு நிறுவனங்களும் வரலாற்று ரீதியாக பழமைவாத கொள்கைகளை கொண்டிருந்தன.
எனவே, சட்டமியற்றுபவர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இதை புரிய வைப்பது மிக கடினமாக காரியமாக இருந்தது என்கின்றனர் ஆர்வலர்கள்.
ஆசிய கண்டத்தில் ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கி இருக்கும் மூன்றாவது நாடு தாய்லாந்து ஆகும்.
தைவான் மற்றும் நேபாளம் ஆகிய ஆசிய நாடுகள் ஏற்கவே ஒரே பாலின திருமணத்தை அங்கீகரித்துவிட்டன.
தாய்லாந்தின் மசோதா தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. மஹா வஜிரலோங்கோர்ன் அரசர் இந்த மசோதாவில் கையெழுத்திட்டால் இது சட்டமாக இயற்றப்பட்டு, அரசு இதழில் வெளியிடப்படும்.
இவை அனைத்தும் முடிவடைந்து அடுத்த 120 நாட்களில் இந்த சட்டம் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.