இந்தியர்களுக்கான விசா தடையை நீக்கியது வங்கதேசம்; இந்தியாவுடனான உறவை புதுப்பிக்க தாரிக் ரஹ்மான் அரசு தீவிரம்
செய்தி முன்னோட்டம்
வங்கதேசத்தில் பிப்ரவரி 12, 2026 அன்று நடைபெற்ற பொதுத்தேர்தலில் வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) அமோக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 17 ஆம் தேதி தாரிக் ரஹ்மான் அந்நாட்டின் புதிய பிரதமராகப் பதவியேற்றார். முன்னதாக, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் கீழ் இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், தாரிக் ரஹ்மான் பொறுப்பேற்றவுடன் இந்தியாவுடன் இணக்கமான உறவை ஏற்படுத்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
விசா சேவைகள்
இந்தியர்களுக்கான விசா சேவைகள் மீட்பு
கடந்த டிசம்பர் 2025 இல் வங்கதேசத்தில் நிலவிய எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு காரணங்களால் இந்தியர்களுக்கான விசா சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், தாரிக் ரஹ்மான் உத்தரவின் பேரில், பிப்ரவரி 20 (வெள்ளிக்கிழமை) முதல் டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகம் மீண்டும் முழுவீச்சில் விசா வழங்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, சுற்றுலா, மருத்துவம், வணிகம் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட ஆகிய அனைத்து விசாக்களும் இனி எவ்விதத் தடையுமின்றி இந்தியர்களுக்கு வழங்கப்படும். மேலும், கடந்த இரண்டு மாதங்களாக நிலுவையில் இருந்த சுமார் 37,000 விண்ணப்பங்களை அடுத்த 10 நாட்களுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியா
இந்தியாவின் சாதகமான பதில்
வங்கதேசத்தின் இந்த நல்லெண்ண நடவடிக்கைக்கு இந்தியாவும் சாதகமாகப் பதிலளித்துள்ளது. வங்கதேச குடிமக்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய விசா சேவைகளும் விரைவில் முழுமையாகத் தொடங்கப்படும் என்று இந்தியத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியதோடு, அவரை இந்தியாவுக்கு வருகை தருமாறும் அழைப்பு விடுத்துள்ளார். தாரிக் ரஹ்மானின் பதவியேற்பு விழாவில் இந்திய மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கலந்துகொண்டது, இரு நாடுகளுக்கும் இடையே புதிய ராஜதந்திர அத்தியாயம் தொடங்கியுள்ளதைக் காட்டுகிறது.
உறவு
உறவில் முன்னேற்றம் ஏற்படுமா?
முந்தைய இடைக்கால ஆட்சியில் நிலவிய இந்திய எதிர்ப்புப் போக்கு மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் குறித்து இந்தியா கவலை தெரிவித்திருந்தது. ஆனால், தாரிக் ரஹ்மான் தனது உரையில், "வங்கதேசம் அனைத்து மதத்தினருக்கும் பாதுகாப்பான நாடாக இருக்கும்" என்று உறுதி அளித்துள்ளார். பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறைகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட அவர் ஆர்வம் காட்டி வருவது, தெற்காசிய பிராந்தியத்தில் ஒரு நேர்மறையான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.