Loading...
இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்கள் சொந்த நாடு திரும்ப புதிய வழிவகை: இலங்கை அரசு ஒப்புதல்
இலங்கை தமிழர்கள் சொந்த நாடு திரும்ப புதிய வழிவகை

இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்கள் சொந்த நாடு திரும்ப புதிய வழிவகை: இலங்கை அரசு ஒப்புதல்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 01, 2026
11:43 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் தங்கியுள்ள பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழ் அகதிகள் எவ்வித சட்டப் பிரச்சனைகளுமின்றி தாயகம் திரும்புவதற்கு புதிய, எளிமையாக்கப்பட்ட வழிமுறையை இலங்கை அரசு முறைப்படி அறிவித்துள்ளது. முறையான பயண ஆவணங்கள் இன்றி இந்தியாவில் தஞ்சம் புகுந்த அகதிகள் மீது குடிவரவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என இலங்கை அமைச்சரவை உறுதியளித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆனந்த விஜேபால சமர்ப்பித்த இந்தச் சிறப்புத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வழிமுறைகள்

தாயகம் திரும்பும் புதிய வழிமுறைகள்

ஊடக அறிக்கையின்படி, ஆகஸ்ட் 1, 2006-க்கு முன் முறையான கடவுச்சீட்டு இன்றி வந்தவர்களின் அடையாளங்களை இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் முதலில் சரிபார்க்கும்.

தூதரக சரிபார்ப்பிற்குப் பின், இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மாநில உளவுத்துறையின் (SIS) பாதுகாப்புச் சான்று பெறப்படும்.

பாதுகாப்பு மற்றும் அடையாளச் சான்றுகளை பூர்த்தி செய்பவர்களுக்குத் தற்காலிக பாஸ்போர்ட் வழங்கப்படும்.

1948-ஆம் ஆண்டின் குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது எந்தவிதக் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.

ஆகஸ்ட் 1, 2006 முதல் மே 19, 2009 வரை வந்த அகதிகளுக்கும் இதே நடைமுறை பொருந்தும். ஆனால், கொலை, தேசத்துரோகம் போன்ற தீவிரக் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு இந்த விலக்கு பொருந்தாது.

பின்னணி

பின்னணியும் தற்போதைய நிலையும்

1983 உள்நாட்டுப் போருக்கு பின் தமிழகத்திற்கு வந்த அகதிகளில், 2002 முதல் 2022 வரை 18,000 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்.

இன்னமும் சுமார் 90,000 இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

மே 2025-ல் இந்தியாவில் இருந்து திரும்பிய 75 வயது அகதி ஒருவர் கடவுச்சீட்டு இல்லையெனக் கூறி இலங்கையில் கைது செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

எனினும் ஜூலை 2025 முதல் பிப்ரவரி 2026 வரை 46 குடும்பங்களை சேர்ந்த 246 பேர் எந்தவித கைது நடவடிக்கையுமின்றி பத்திரமாக தாயகம் திரும்பியுள்ளனர்.

ADVERTISEMENT