நாய் இறைச்சிக்கு நிரந்தர தடை விதிக்கும் மசோதாவை நிறைவேற்றியது தென் கொரியா
தென் கொரியாவின் நாடாளுமன்றம் செவ்வாயன்று நாய் இறைச்சித் தொழிலை சட்டவிரோதமாக்குவதற்கான முக்கிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. சர்வதேச கௌரவம் மற்றும் விலங்கு உரிமைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த நாய் பண்ணையாளர்கள், அரசியலமைப்பு முறையீட்டை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், எதிர்ப்புப் பேரணிகளைத் தொடங்க இருப்பதாகவும் கூறியுள்ளனர். எனவே, இந்த தடை மீதான சூடான விவாதம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக கொரிய தீபகற்பத்தில் வாழும் மக்கள் உண்ணும் நாய் இறைச்சிகள், தென் கொரியாவில் வெளிப்படையாக தடை செய்யப்பட்டதும் இல்லை, சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதும் இல்லை.
நாய் இறைச்சியை விற்றால் சுமார் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை
தற்போது பெரும்பான்மையான தென் கொரிய மக்கள் நாய் இறைச்சியை உண்பதில்லை என்றும், பெரும்பாலான தென் கொரியர்கள் நாய் இறைச்சியை தடை செய்வதற்கு ஆதரவாக இருக்கின்றனர் என்றும் சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால், தென் கொரியர்களில் மூன்றில் ஒருவர் நாய் இறைச்சியை உண்பதில்லை என்றாலும் அவர்கள் நாய் இறைச்சியை தடை செய்யவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். செவ்வாயன்று, தென் கொரிய தேசிய சட்டமன்றம் 208-0 வாக்குகள் வித்தியாசத்தில் நாய் இறைச்சிக்கு நிரந்தர தடை விதிக்கும் மசோதாவை நிறைவேற்றியது. நாய் இறைச்சிக்காக நாயை படுகொலை செய்தல், இனப்பெருக்கம் செய்தல், வியாபாரம் செய்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றை இந்த மசோதா 2027ஆம் ஆண்டு முதல் சட்டவிரோதமாக்கும். இதுபோன்ற செயல்களுக்கு சுமார் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.