அதிகரிக்கும் கொரோனா; முகக்கவசத்தை கட்டாயமாக்கிய சிங்கப்பூர் அரசு
உலகெங்கும் கொரோனா நோய் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சிங்கப்பூர் அரசாங்கம் முகக்கவசத்தை கட்டாயமாக்க முடிவு செய்துள்ளது. இந்த மாதத்தில் மட்டும், சிங்கப்பூரில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 56000 ஆகும். சிங்கப்பூர் சுகாதார அமைச்சகத்தின் அறிக்கை படி, டிசம்பர் 3 முதல் 9 ஆம் தேதி வரை, தோராயமாக 56 043 கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளது. இது, அதற்கு முந்தைய வாரத்தை விட அதிகமாகும். இதனால், முகக்கவசத்தை கட்டாயமாக்குவதோடு மட்டுமின்றி, பயண ஆலோசனைகளை புதுப்பிக்கவும் ஆலோசித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களை, தனிப்பட்ட மற்றும் சமூக பொறுப்பினை கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது சிங்கப்பூர் அரசு.
பொதுமக்களுக்கு அரசு வேண்டுகோள்
கடுமையான சுவாச பிரச்னைகள் உள்ள மக்கள், தங்கள் உடல்நிலை சரியாகும் வரை, வீட்டிற்குள் தனிமையில் இருக்குமாறு சிங்கப்பூர் அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல, தனிமனித இடைவெளியையும் கவனத்தில் கொள்ளுமாறு கூறுகிறது. கூட்டநெரிசலை தவிர்க்குமாறும் கூறியுள்ளது. பயணிகளின் கவனத்திற்கு: பயணம் செய்வதற்கு 4 - 6 வாரங்களுக்கு முன்னர், உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து, காப்பீடு, தடுப்பூசி பற்றி கலந்தாலோசிக்கவும். மஞ்சள் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவும். பயணிகள் கோவிட் தடுப்பூசி பற்றி சரியான தகவல்களுடன் பயணிக்கவும். உங்களுக்கு இரும்பல், சளி, காய்ச்சல் போன்ற தொந்தரவு இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுகவும். முகக்கவசத்தை கட்டாயம் அணியவும்.