மக்கள்தொகை சரிவை கட்டுப்படுத்த வினோத முயற்சி: சொந்தமாக 'டேட்டிங் ஆப்' அறிமுகம் செய்த சிங்கப்பூர் அரசு
செய்தி முன்னோட்டம்
சிங்கப்பூரில் தொடர்ந்து சரிந்து வரும் பிறப்பு விகிதம் மற்றும் திருமணங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த, அந்நாட்டு அரசே 'First Date' என்ற புதிய டேட்டிங் செயலியை உருவாக்கி அறிமுகப்படுத்தியுள்ளது. சிங்கப்பூரின் அரசு தொழில்நுட்ப அமைப்பால் உருவாக்கப்பட்டுள்ள இச்செயலி, வழக்கமான வர்த்தக ரீதியிலான டேட்டிங் செயலிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நடைமுறையைக் கொண்டுள்ளது. முதற்கட்டமாக 21 முதல் 35 வயதுடைய திருமணமாகாத அரசு ஊழியர்கள் மட்டுமே இச்செயலியை பயன்படுத்த முடியும்.
அம்சங்கள்
'பர்ஸ்ட் டேட்' செயலியின் முக்கிய அம்சங்கள்
டிண்டர், ஹிஞ்ச் போன்ற செயலிகளைப் போல அன்லிமிடெட் ஸ்வைப்பிங் வசதி கிடையாது.
பயனரின் விருப்பங்கள் மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான தகவல்களின் அடிப்படையில், ஒரு நேரத்தில் ஒரு நபரின் சுயவிவரம் மட்டுமே பரிந்துரைக்கப்படும்.
பரிந்துரைக்கப்பட்ட நபருடன் உரையாடலைத் தொடரலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய இருவருக்கும் 72 மணி நேரம் அவகாசம் வழங்கப்படும். இரு தரப்பும் சம்மதித்தால் மட்டுமே தொடர்பு எண்கள் பகிரப்படும்.
போலி கணக்குகளை தவிர்க்க சிங்கப்பூரின் தேசிய டிஜிட்டல் அடையாள அமைப்பான 'Singpass' மூலம் மட்டுமே கணக்கு தொடங்க முடியும்.
ஒரே துறையில் பணிபுரியும் சக ஊழியர்கள் ஜோடிகளாக இணைக்கப்பட மாட்டார்கள்.
தரவு
பின்னணியும் மக்கள் தொகை தரவுகளும்
சிங்கப்பூரில் இளைஞர்கள் தாமதமாகத் திருமணம் செய்வதாலும், தனித்து வாழ்வதை விரும்புவதாலும் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்து வருகிறது.
மொத்த கருவுறுதல் விகிதம் (TFR): 0.97-லிருந்து 0.87 குறைந்துள்ளது.
இந்தாண்டு பதிவான திருமணங்கள்: 24,688 (6.2% சரிவு), குழந்தைகள் பிறப்பு விகிதமும் 11.4% சரிவு.
சிங்கப்பூரில் முதன்முறையாக திருமணம் செய்யும் ஆண்களின் சராசரி வயது 31.1 ஆகவும், பெண்களின் சராசரி வயது 29.6 ஆகவும் உயர்ந்துள்ள சூழலில், குடும்ப அமைப்பையும் குழந்தைப்பேற்றையும் ஊக்குவிக்க அரசு இந்த வினோதமான முயற்சியை கையில் எடுத்துள்ளது.