எனது தந்தை, மற்ற தியாகிகள் கடுமையாக அவமதிக்கப்பட்டனர்: மௌனம் கலைத்த ஷேக் ஹசினா
பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று தனது முதல் அறிக்கையை வெளியிட்டார். அதில், அவாமி லீக்கிற்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு, தனது தந்தையும், வங்கதேசத்தின் ஸ்தாபக ஜனாதிபதி பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் மற்றும் பல தியாகிகளுக்கு இழைக்கப்பட்ட பெரும் அவமானம் என்று விவரித்தார். தேசத் தந்தை பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் அவர்களின் தலைமையில் சுதந்திர தேசமாக சுயமரியாதை பெற்று, சுயஅடையாளம் பெற்று, சுதந்திர நாட்டைப் பெற்ற தேசத் தந்தை, மிகவும் அவமானப்படுத்தப்பட்டுள்ளார் என ஹசீனா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையை அவரது மகன் சஜீப் வஜீத் மூலமாக வெளியிட்டுள்ளார்.
வன்முறை மற்றும் உயிரிழப்புகள் குறித்தும் கவலை தெரிவித்தார் ஹசீனா
"பயங்கரவாதம் மற்றும் வன்முறையால் மாணவர்கள், ஆசிரியர்கள், காவலர்கள், ஊடகவியலாளர்கள், கலாச்சார பணியாளர்கள் மற்றும் அப்பாவி பார்வையாளர்கள் உயிரிழந்துள்ளனர். அன்புக்குரியவர்களை இழந்து வேதனையுடன் வாழ்பவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ஹசீனா கூறினார். நாட்டில் நடந்த கொலைகள் மற்றும் நாசவேலைகளுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஹசீனா கோரினார். "இந்தக் கொலைகள் மற்றும் நாசவேலைகளில் ஈடுபட்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிக்கப்படவேண்டும்" என்று அவர் மேலும் கூறினார். மேலும், அவாமி லீக் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படுகொலை ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தேசிய துக்க தினத்தை அனுசரிக்குமாறு பங்களாதேஷ் பிரஜைகளை வலியுறுத்தினார்.