14 ஆண்டுகால சர்வாதிகாரம் வீழ்ந்தது; செர்பிய தேர்தலில் மாணவர்கள் அமைப்பு வெற்றி
செய்தி முன்னோட்டம்
செர்பியா நாட்டில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) நடைபெற்ற அவசர நாடாளுமன்றத் தேர்தலில், நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் வுசிச்சின் செர்பிய முன்னேற்றக் கட்சி தோற்கடிக்கப்பட்டு, மாணவர்கள் தலைமையிலான மாணவர்கள் பட்டியல் இயக்கம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 14 ஆண்டுகளாகச் செர்பியாவை ஆட்சி செய்து வந்த வலதுசாரி பாப்புலிச ஆட்சியை மாணவர்கள் தலைமையிலான இந்த வெகுஜன இயக்கம் முறியடித்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான இரண்டு மணி நேரத்திற்குள் வுசிச் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.
மக்கள் கிளர்ச்சி
நோவி சாட் விபத்து மற்றும் ஊழலுக்கு எதிரான மாபெரும் மக்கள் கிளர்ச்சி
கடந்த 2024 ஆம் ஆண்டு நோவி சாட் ரயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 16 அப்பாவி மக்கள் பலியான துயர சம்பவமே இந்த அரசியல் மாற்றத்தின் தொடக்கப் புள்ளியாக அமைந்தது.
அரசாங்கத்தின் ஊழல் மற்றும் அலட்சியமே இந்த விபத்திற்குக் காரணம் எனக் கூறி மாணவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
ஸ்லோபோடன் மிலோசெவிச் ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு, செர்பியாவில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல் எதிர்ப்புப் போராட்டமாக இது உருவெடுத்து, தற்பொழுது வாக்குப் பதிவின் மூலம் புதிய ஆட்சியை நிறுவியுள்ளது.
வாக்குப்பதிவு
30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 65 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேர்தலில் செர்பிய மக்கள் திரளாக வந்து வாக்களித்தனர்.
நாட்டில் உள்ள 6.4 மில்லியன் வாக்காளர்களில் 65 சதவீதத்திற்கும் அதிகமானோர் மாலை 6:00 மணிக்குள் வாக்களித்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது 1993 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் 61 சதவீத வாக்குப்பதிவை முறியடித்து, கடந்த மூன்று தசாப்தங்களில் பதிவான மிக அதிகபட்ச வாக்குப்பதிவாகப் பதிவாகியுள்ளது.
அரசியல் அனுபவமற்ற பேராசிரியர்கள் மற்றும் கலைஞர்களை வேட்பாளர்களாக நிறுத்தி ஊழலற்ற ஆட்சியை மாணவர்கள் உறுதியளித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவேற்பு மற்றும் உலகளாவிய புவிசார் அரசியல் மாற்றம்
மாணவர்களின் இந்த வெற்றிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஹங்கேரி பிரதமர் பீட்டர் மாத்யார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சட்டம், ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கு உதவத் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
ரஷ்யா மற்றும் சீனாவுடன் நெருக்கமான உறவைப் பேணி வந்த வுசிச்சின் வீழ்ச்சியால், செர்பியா இனி ஐரோப்பிய ஒன்றியத்துடன் முழுமையாக இணையக்கூடும் எனக் கருதப்படுகிறது.
இது பால்கன் பிராந்தியத்தில் ரஷ்யாவின் பிடியைத் தளர்த்தும் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.