தம்பதியருக்கான மருத்துவ காப்பீடு ஒரே-பாலின தம்பதியருக்கும் வழங்கப்பட வேண்டும்
தென் கொரியாவில் உள்ள சியோல் உயர் நீதிமன்றம், தன்பாலின ஈர்ப்பு தம்பதிகளுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்தை வழங்கியுள்ளது. தென் கொரியாவின் தேசிய சுகாதார காப்பீட்டுச் சேவையில்(NHIS) பிற தம்பதிகளுக்கு எந்த மாதிரியான உரிமைகள் வழங்கப்படுகிறதோ அதே சலுகைகளும் உரிமைகளும் ஒரே-பாலின தம்பதிகளுக்கும் உண்டு என்று தென் கொரிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தென் கொரியாவில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு சாதகமாக வழங்கப்படும் முதல் தீர்ப்பு இது தான். இதன் மூலம், தன்பாலின ஈர்ப்பாளர்களின் சட்டபூர்வமான அங்கீகாரத்தை தென் கொரியா ஏற்றுக்கொண்டுள்ளது. ஒரே-பாலின திருமண சட்டம் தென் கொரியாவில் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்றாலும், தென் கொரியாவின் முன்னேற்றத்தில் இது ஒரு பெரும் படியாக பார்க்கப்படுகிறது
பால்புதுமையர் சமூகத்திற்கு சாதகமான தீர்ப்பு
2021ஆம் ஆண்டு தன் துணைவரான கிம் யோங்-மினுக்கு மருத்துவ காப்பீடு மறுக்கப்பட்டதால், சோ சியோங்-வூக் என்பவர் NHIS மீது வழக்குத் தொடர்ந்தார். முதலில், இந்த தம்பதியருக்கு கவரேஜ் வழங்கிய NHIS, அதன்பின், "ஒரே பாலின தம்பதியருக்கு கவரேஜ் வழங்கி நாங்கள் தவறு செய்துவிட்டோம்" என்று கூறி அவர்களுக்கு கிடைத்த கவரேஜை நீக்கியது. இதனாலேயே அவர் NHIS மீது வழக்குத் தொடர்ந்தார். "சமத்துவம் என்பது ஒரு முக்கியமான பிரச்சினை" என்று சோங்-வூக் பிபிசியிடம் கூறி இருந்தார். ஜனவரி மாதம், சிறு நீதிமன்றம் ஒன்று அவர்களின் சட்டபூர்வ அங்கீகாரத்தை நிராகரித்தது. அதன் பின், இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சோ சியோங்-வூக்-க்கு மட்டுமல்லாமல் பால்புதுமையர் சமூகத்திற்கும் சாதகமாக தீர்ப்பை வழங்கியுள்ளது.