ஆப்கானிஸ்தான் வழியாக சென்று கொண்டிருந்த ரஷ்ய விமானம் மாயம்
இந்தியாவில் இருந்து உஸ்பெகிஸ்தான் வழியாக மாஸ்கோவிற்குச் சென்று கொண்டிருந்த ஒரு சிறிய சார்ட்டர் ஜெட் விமானம் சனிக்கிழமை மாலை ஆப்கானிஸ்தானின் ரேடார் திரைகளில் இருந்து காணாமல் போனதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் விமானப் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பான ரோசாவியாட்சியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கிடையில், நேற்று இரவு ஆப்கானிஸ்தானில் ஒரு விமான விபத்து ஏற்பட்டது தொடர்பாக தங்களுக்கு தகவல் கிடைத்ததாக ஆப்கானிஸ்தான் காவல்துறை கூறியுள்ளது. பிரெஞ்சு தயாரிப்பில் உருவான டசால்ட் ஃபால்கன் 10 ஜெட் விமானம் ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்டதாகும். முதற்கட்ட தகவல்களின் படி, அந்த விமானத்தில் நான்கு பணியாளர்கள் மற்றும் இரண்டு பயணிகள் உட்பட ஆறு பேர் இருந்தனர்.
மலைப் பகுதியில் அந்த விமான விபத்து ஏற்பட்டதாக தகவல்
இந்நிலையில், இது குறித்து செய்தியை வெளியிட்ட சில ஆப்கானிஸ்தான் ஊடங்கங்கள் விபத்துக்குள்ளான விமானம் இந்தியாவுக்கு சொந்தமானது என்று கூறியிருந்தன. ஆனால், அதை இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மறுத்துள்ளது. "ஆப்கானிஸ்தானில் தற்போது துரதிர்ஷ்டவசமாக விபத்துக்குள்ளான விமானம், இந்திய விமானமோ சார்ட்டர் விமானமோ அல்ல. அது மொராக்கோ பதிவு செய்யப்பட்ட சிறிய விமானமாகும். அது குறித்த மேலும் தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை." என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது. ஆப்கானிஸ்தானின் வடக்கே உள்ள படாக்ஷானின் தொலைதூர மலைப் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டதாக ஆப்கானிஸ்தான் மாகாண காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். விபத்துக்கான காரணம் மற்றும் அந்த விபத்தில் சிக்கியவர்கள் என்ன ஆனார்கள் போன்ற தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.