இந்தியாவில் நடக்கும் ஜி20 மாநாடு - ரஷ்ய அதிபர் பங்கேற்கவில்லை என தகவல்
இந்தியாவில் நடக்கவுள்ள ஜி20 மாநாடு நிகழ்வுக்கு ரஷ்ய அதிபர் புதின் வருகை தர மாட்டார் என்று அந்நாட்டு அதிபர் மாளிகை தகவல் அளித்துள்ளது. சர்வதேச பொருளாதார முக்கிய பிரச்சனைகள், நிர்வாகம் வடிவமைப்பு மற்றும் உலகளாவிய கட்டமைப்பு ஆகியவற்றுள் ஜி20 மாநாடு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், இம்முறை இந்தியா இந்த ஜி20 மாநாட்டினை தலைமை தாங்கி நடத்தவுள்ளது. இதனால் இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் அதிபர்கள் அனைவரும் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. டெல்லியில் வரும் செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10 தேதிகளில் இந்த மாநாடு நடக்கவுள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருகிறது.
காணொளி வாயிலாக கலந்து கொள்வார்
இந்நிலையில் இதில் உறுப்பினராக உள்ள ரஷ்யா அதிபர் புதின் இந்தியாவில் நடக்கும் இந்த ஜி20 மாநாடு நிகழ்வில் கலந்துகொள்ள மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக இந்தியா வருவதற்கான எவ்வித திட்டமும் அவருக்கு இல்லை என்றும் அந்நாட்டு அதிபர் மாளிகை கூறியுள்ளது என்று தெரிகிறது. ஆனால், அதே நேரம் அவர் ஜி20 மாநாட்டில் காணொளி வாயிலாக கலந்து கொள்ளவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் தென் ஆப்பரிக்காவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டிலும் இவர் நேரடியாக கலந்து கொள்ளாமல் காணொளி வாயிலாக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.