அதிபர் புட்டினுக்கு மாரடைப்பா? புரளி என மறுக்கும் ரஷ்யா
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நலக்குறைவு தொடர்பான சமீபத்திய அறிக்கைகளை "அபத்தமான புரளி" என்று ரஷ்யா கூறியுள்ளது. அவர் நல்ல நிலையில் இருப்பதாக வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதேபோல, அதிபர் புட்டினுக்கு பதிலாக, வேறு ஒரு நபரை மாறுவேடத்தில் அமர்த்தியுள்ளதாக வெளியான செய்தியையும், ரஷ்யாவின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் மறுத்துள்ளார். சமீபகாலமாகவே புடினின் உடல்நிலை பற்றி செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. அதற்கேற்ப அதிபர் புடினும், வெளியுலகில் அதிகம் தென்படாமல் இருந்து வந்தார். நீண்டநாட்களுக்கு பிறகு அவர் சீனாவில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பங்கு கொள்ள சென்றார். அதுவே, அதிபர் புடின் அல்ல என்றும் அவரது டூப் என்றும் செய்திகள் வெளியாகின.
டெலிகிராமில் வெளியான தகவல்
அக்டோபர் 7 அன்று 71 வயதை எட்டிய புட்டின், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு (அக்டோபர் 22) கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக சில ஊடக செய்திகள் வெளியாகின. இந்த செய்தியின் மூலாதாரமாக, ஒரு டெலிகிராம் சேனல் அறிக்கை என கூறப்படுகிறது. அந்த டெலிகிராம் செய்தியின் படி, ஞாயிற்றுக்கிழமை (மாஸ்கோ நேரம்) இரவு 9:00 மணியளவில், ஜனாதிபதியின் படுக்கையறையில் இருந்து, பொருட்கள் விழும் சத்தம் கேட்டுள்ளது. உடனே, புடினின் பாதுகாப்புப் பணியாளர்கள் அவரின் படுக்கையறைக்கு விரைந்ததாகவும், அங்கே, புடின் படுக்கையிலிருந்து கீழே விழுந்து கிடந்தாகவும், உணவு மற்றும் பானங்களுடன் ஒரு மேசை கவிழ்ந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
அதிபர் புட்டினுக்கு மாரடைப்பா?
கீழே விழுந்து கிடந்த புடினுக்கு வலிப்பு ஏற்பட்டதாகவும், கண்கள் மேல்நோக்கி தூக்கியதாகவும் கூறப்படுகிறது. உடனே, மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு, கிரெம்ளின் மாளிகையிலேயே அவசர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சிகிச்சையின் போது மருத்துவர்கள், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என கூறியதாகவும், உடனடியாக அவரது இதயத்துடிப்பை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியதாகவும் அந்த அறிக்கை மேலும் கூறியது. எனினும், இந்த தகவல் வெளியுலகத்திற்கு கசிய கூடாது என்பதற்காக அதிபர் மாளிகையிலேயே அவருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது.
வதந்தி என மறுத்த அதிபர் மாளிகை
இந்த அறிக்கைகளைத் தொடர்ந்து, புடின் ஆரோக்கியமாக இருப்பதாக ரஷ்யாவின் அதிபர் மாளிகை தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கிடையில், 2020 இன் நேர்காணலில், அதிபர் புடின், தன்னை போல தோற்றமளிக்கும் டோப்பல்கேஞ்சர்களைப்(டூப்), பாதுகாப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தார். அதற்கேற்ப, நீண்டகாலமாக புடினின் உடல்நிலை குறித்து கவலை தரும் செய்திகள் வெளிவந்த நேரத்தில், நீண்டகாலத்திற்கு பிறகு கூட்டங்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார், புடின். அவரது சமீபத்திய வெளிநாட்டு பயணங்களில், கடந்த வாரம் சீனாவுக்கான பயணமும் அடங்கும். அவர் ஊர் திரும்பும் வழியில், இரண்டு ரஷ்ய நகரங்களிலும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அது அவருடைய டூப் என்று தற்போது ஊடகங்கள் கூறத்தொடங்கியுள்ளன. ஆனால் அதையும் அதிபர் மாளிகை மறுத்துள்ளது