அரசு அதிகாரிகள் ஆப்பிள் சாதனங்களைப் பயன்படுத்தத் தடை விதித்தது ரஷ்யா
ரஷ்ய அரசு அதிகாரிகள் ஆப்பிள் ஐபோன்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்திருக்கிறது அந்நாட்டு அரசு. ஆப்பிள் ஐபோன்களின் மூலம் முக்கிய அதிகாரிகள் உளவு பார்க்கப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து இந்த புதிய விதிமுறையை அறிவித்திருக்கிறது ரஷ்யா. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைப்பாகவும், உளவு அமைப்பாகவும் செயல்பட்டு வரும் அமைப்பான Federal Security Services (FSB) அமைப்பே ஆப்பிள் ஐபோன்களைப் அரசு அதிகாரிகள் பயன்படுத்தத் தடை செய்யப் பரிந்துரை செய்திருக்கிறது. ஐபோன்கள் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனத்தின் எந்த சாதனத்தையும் பயன்படுத்த வேண்டாம் என ரஷ்ய அரசு அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். மேலும், ஐபோன்களுக்கு மாற்றாக வேறு பாதுகாப்பான போன்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
ஆப்பிளின் மீது குற்றம் சுமத்தும் ரஷ்யா:
'ரஷ்யாவின் ரகசியங்களையும் திட்டங்களையும் தெரிந்து கொள்ள தங்கள் நாட்டு நிறுவனத்தின் சாதனங்களை அமெரிக்கா பயன்படுத்தலாம்' எனத் தெரிவித்திருக்கிறது ரஷ்ய உளவு அமைப்பான FSB. தங்கள் அரசு அதிகாரிகளிடம் ஆப்பிள் சாதனங்களின் பயன்பாட்டை நிறுத்தக் கோரி கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே கேட்டுக் கொண்டிருக்கிறது ரஷ்யா. மேலும், அமெரிக்காவின் உளவு நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்படுவதாக ஆப்பிள் நிறுவனத்தின் மீதும் கடந்த மாதம் குற்றம்சாட்டியிருந்தது ரஷ்யா. ஆனால், ரஷ்யாவின் இந்தக் குற்றச்சாட்டை முழுவதுமாக மறுத்திருக்கிறது ஆப்பிள். அமெரிக்கா மட்டுமல்லாது, உலகின் எந்த நாட்டு அரசுடனும் தாங்கள் இணைந்து செயல்படவில்லை எனத் தெரிவித்திருக்கிறது ஆப்பிள். ரஷ்ய அதிகாரிகள் மற்றும் அரசு அமைப்புகள் மீதான உளவு நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதையடுத்து இந்த ஆப்பிள் சாதனத் தடையை அமல்படுத்தியிருக்கிறது ரஷ்யா.