உக்ரைன் துறைமுகம் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் - டன் கணக்கிலான தானியங்கள் சேதம்
ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் நாட்டினை கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆக்கிரமித்தது. இதனையடுத்து சிறிய நாடான உக்ரைன், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் ஆயுத உதவிகளை கொண்டு ரஷ்யா மீது பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்த இருநாடுகள் இடையே நடக்கும் போரில் பலத்தரப்பட்ட சேதங்கள் ஏற்பட்டுள்ளதோடு, அப்பாவி மக்களின் உயிர்களும், பலியாகி வருகிறது. இந்நிலையில் உக்ரைன்-ருமேனியா எல்லை பகுதியில் ஓடும் டானுபே ஆற்றின் அருகேயுள்ள இஸ்மாயில் துறைமுகம் மீது ரஷ்யா தற்போது ட்ரோன்கள் கொண்டு தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த தாக்குதலால் அந்த துறைமுகத்தில் இருந்து தானியங்களை ஏற்றி செல்லும் கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தானிய விநியோகம் பாதிக்கப்பட வேண்டும் என எண்ணும் ரஷ்யா-உக்ரைன் அதிபர்
சரக்குக்கப்பல்கள் ஆப்ரிக்கா, இஸ்ரேல், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு தானியங்களை ஏற்றிச்செல்ல துறைமுகத்திற்குள் நுழையும்பொழுது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் 40 ஆயிரம் டன் தானியங்கள் சேதமடைந்துள்ளது என்றும், டானுபே துறைமுகக்கட்டமைப்புகள் அனைத்தும் பெரியளவில் சேதமாகியுள்ளது என்றும் உக்ரைன் நாட்டின் துணை பிரதமர்-ஒலெக்ஸாண்டர் குப்ரகோவ் தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைன் நாட்டின் தானிய ஏற்றுமதிக்கு ஈடாக வேறொரு நாட்டால் ஏற்றுமதி செய்ய இயலாது என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து, ரஷ்யா நடத்திவரும் இப்போரால் உலக உணவுச்சந்தை அழிந்துவிடும் என்றும், தானிய விநியோகம் பாதிக்கப்பட வேண்டும் என்பதையே ரஷ்யா விரும்புகிறது என்றும் உக்ரைன் நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டினை முற்றிலுமாக மறுத்துள்ள ரஷ்யா, அத்துறைமுகம் ராணுவ தளவடங்களுக்கும், அயல்நாட்டு பயங்கரவாதிகளுக்கும் புகலிடமாக இருந்துவந்தது என்று கூறியுள்ளனர்.