'ஆன்டி இந்தியன்' எழுத்துக்களால் சிதைக்கப்பட்ட இந்து கோவில்
கனடாவின் மிசிசாகாவில் உள்ள ராமர் கோவில் ஒன்று 'ஆன்டி இந்தியன்' எழுத்துக்களால் சிதைக்கப்பட்டுள்ளது. டொராண்டோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டித்ததுடன், உடனடி நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது. "மிசிசாகாவில் உள்ள ராமர் கோவில் ஆன்டி இந்தியன் கிராஃபிட்டிகளால் சிதைக்கப்பட்டதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கனேடிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்." என்று இந்திய துணைத் தூதரகம் ட்வீட் செய்துள்ளது. அந்த கோவிலில் இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிராக வாசகங்கள் எழுதியுள்ளனர். மேலும், பிந்த்ராவாலாவை வாழ்த்திப் பாராட்டியும் அதில் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. பிந்த்ராவாலா என்பவர் பஞ்சாப்பில் இருக்கும் சீக்கியர்களுக்கு, தனி தேசம் வேண்டும் என்று போராடியவர் ஆவார்.
இதற்கு முன் நடந்த இதே போன்ற ஒரு சம்பவம்
பிராம்ப்டனின் மேயர், பேட்ரிக் பிரவுன், இதை 'ஹேட் கிரைம்'(மற்றவர்கள் மீது இருக்கும் வெறுப்பினால் செய்யப்படும் குற்றங்கள்) என்று குறிப்பிட்டு இதற்கு அதிகாரிகள் தீவிரமான நடவடிக்கை எடுப்பர் என்று கூறியுள்ளார். " 12 பிரிவுகளில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் இதை செய்தவர்களைக் கண்டுபிடிப்பார்கள். மத சுதந்திரம் என்பது கனடாவில் அனைவருக்குமான உரிமையாகும். மேலும் அனைவரும் அவரவர் வழிபாட்டுத் தலத்தில் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்." என்று பிராம்ப்டனின் மேயர், பேட்ரிக் பிரவுன் கூறியுள்ளார். இப்படி ஒரு இந்து கோவில் சிதைக்கப்படுவது கனடாவில் இது முதல் முறையல்ல. கடந்த ஜனவரியில், பிராம்ப்டனில் உள்ள ஒரு இந்து கோவிலில் இந்தியாவுக்கு எதிரான ஓவியங்கள் வரையப்பட்டிருந்தது சர்ச்சையை கிளப்பியது.