செக் குடியரசு துப்பாக்கிச் சூடு: சார்லஸ் பல்கலைக்கழகத்தில் 14 பேர் சுட்டுக்கொலை, 25 பேர் காயம்
செக் குடியரசின் தலைநகர் ப்ராக் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில், 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், 25 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நவீன செக் குடியரசு நாட்டின் வரலாற்றில் பதிவான, மிகவும் மோசமான துப்பாக்கி சூடுகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட டேவிட் கோசாக், உயிரிழந்ததாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட டேவிட் கோசாக் அவர் சொந்த ஊரான ஹோஸ்டவுன் பகுதியில் உள்ள வீட்டில், அவரது தந்தையையும் சுட்டுக்கொன்றார். ஜன் பலாச் சதுக்கத்தில் உள்ள பல்கலைக்கழக கலை பீட கட்டிடத்தில், உள்ளூர் நேரப்படி சுமார் 15:00 மணிக்கு துப்பாக்கி சூடு தொடங்கியது.
ப்ராக் சார்லஸ் பல்கலைக்கழக துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட டேவிட் கோசாக் யார்?
டேவிட் கோசாக் ப்ராக் சார்லஸ் பல்கலைக்கழகத்தில் போலந்து வரலாறு பட்டப்படிப்பை பயின்று வந்தார். ப்ராக் காவல்துறைத் தலைவர் மார்ட்டின் வோண்ட்ராசெக், டேவிட் கோசாக் எந்த குற்றப் பதிவும் இல்லாத சிறந்த மாணவர் என்று விவரித்தார், ஆனால் வேறு எந்த தகவலையும் வழங்கவில்லை. கடுமையான காயத்தால் உயிரிழந்த டேவிட் கோசாக், தன்னைத்தானே சுட்டுக் கொண்டாரா அல்லது காவல்துறை துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தாரா என்பது தெளிவாகவில்லை. அவர் பல துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை வைத்திருந்ததாகவும், இதனால் ஒரு பயங்கரமான தாக்குதலுக்கு அவர் தயாராக இருந்தது உறுதியாவதாக காவல்துறை கூறுகிறது. தாக்குதலில் ஈடுபடும் முன் சமூக வலைதளங்களில், தற்கொலை மற்றும் வெகுஜன கொலைகள் பற்றிய சிந்தனையில் ஈடுபட்டதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றனர்.