ஈரான் போர் பதற்றத்திற்கு மத்தியில் அதிரடி சந்திப்பு! எஸ்சிஓ மாநாட்டில் ஈரான் அதிபரை நேரில் சந்தித்த பிரதமர் மோடி
செய்தி முன்னோட்டம்
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்று வரும் 26வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாட்டின் இடையே, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஈரான் அதிபர் மசூத் பேஷெஷ்கியான் இடையே திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) முக்கிய சந்திப்பு நடைபெற்றது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் வெடித்த பிறகு, இரு நாட்டுத் தலைவர்களும் நேரில் சந்தித்துப் பேசுவது இதுவே முதல்முறையாகும். மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் அனைத்தும் பேச்சுவார்த்தை மற்றும் தூதரக வழிகளிலேயே தீர்க்கப்பட வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தொடர்ந்து உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி
ஹார்முஸ் ஜலசந்தி அடைப்பும் உலகளாவியப் பாதிப்பும்
இரு தலைவர்களும் என்ன விஷயங்கள் குறித்துப் பேசினார்கள் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ கூட்டு அறிக்கை இன்னும் வெளியாகவில்லை என்றாலும், உலகளாவிய விநியோகச் சங்கிலியை பெரிதும் பாதித்துள்ள ஹார்முஸ் ஜலசந்தி மூடல் குறித்து அவர்கள் ஆலோசித்திருக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி முதல் ஈரான் தலைமையுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் பிரதமர் மோடி, மத்திய கிழக்கில் அமைதியைத் திரும்பக் கொண்டுவரவும், உலகளாவிய வர்த்தக விநியோகச் சங்கிலி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் வலியுறுத்தி வருகிறார்.
புதிய தாக்குதல்
ஈரான் - அமெரிக்கா இடையிலான புதிய வான்வழித் தாக்குதல்கள்
அமெரிக்காவும் ஈரானும் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பரஸ்பரத் தாக்குதல்களைத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கண்ணிவெடிகளை வைப்பதைத் தடுக்கவே லாராக் தீவில் உள்ள ஈரானிய ராணுவத்தின் ராக்கெட் ஏவுதளங்களைத் தாக்கியதாக அமெரிக்கா கூறியது.
இதற்குப் பதிலடியாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களை நோக்கி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
அமைதி
அமைதியை வலியுறுத்தும் தலைவர்கள்
மாநாட்டிற்குப் புறப்படுவதற்கு முன் பேசிய ஈரான் அதிபர் பேஷெஷ்கியான், "நாங்கள் போரை விரும்பவில்லை, ஆனால் ஆக்கிரமிப்பாளர்களுக்குப் தீர்க்கமான பதிலடி கொடுப்போம்" என்று குறிப்பிட்டிருந்தார்.
அதே நேரத்தில், ஜூன் 30 அன்று நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது பிராந்தியப் பதற்றம் குறித்துக் கவலை தெரிவித்த பிரதமர் மோடி, ஈரானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ததற்காக ஈரான் அதிபருக்குத் தனது நன்றியையும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.