பாகிஸ்தான் முன்னாள் அதிபர் உயிரிழப்பு: யார் இந்த பர்வேஸ் முஷாரப்
2016ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வாழ்ந்து வந்த முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் ஞாயிற்றுக்கிழமை(பிப் 5) காலமானார். முக்கியமான காலகட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றிய இவர், 1999இல் நடந்த இந்தியாவுடனான கார்கில் போருக்குப் பிறகு சதியின் மூலம் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் அரசாங்கத்தை கவிழ்த்து, பாகிஸ்தானின் 10வது அதிபரானார். 1999ல் பாகிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய முஷாரப், 2001ல் தன்னை தானே அதிபராக அறிவித்தார். 2007ஆம் ஆண்டில், அவர் பாகிஸ்தானின் அரசியலமைப்பை இடைநீக்கம் செய்து, அவசரநிலையை விதித்தபோது அவரது சர்வாதிகாரம் நெருக்கடிக்கு உள்ளானது. அதன்பின், அவரது கட்சி 2008 தேர்தலில் ஷெரீப் மற்றும் ஆசிப் அலி சர்தாரி தலைமையிலான கூட்டணியிடம் தோல்வியடைந்தது.
டெல்லியில் பிறந்து பாகிஸ்தான் அதிபர் ஆனவர்
2007ஆம் ஆண்டு நடந்த முன்னாள் பிரதமர் பூட்டோவின் படுகொலையில் பங்கிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டதால், முஷாரப்புக்கு மரண தண்டனை விதிக்கபப்ட்டது. அதன்பின், அது ரத்தும் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முஷாரப் 1943இல் டெல்லியில்(பிரிக்கப்படாத இந்தியாவில்) பிறந்தார். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு தனது குடும்பத்துடன் பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்தார். 1999 கார்கில் போரை நடத்திய முக்கிய நபராக முஷாரப் கருதப்பட்டார். பாகிஸ்தான் சிவில் அரசாங்கத்தின் அனுமதியின்றி அந்த போரை அவர் நடத்தியதால் அவருக்கு அந்த முக்கியத்துவம் கிடைத்தது. இந்த நடவடிக்கையின் மூலம் இந்தியாவுடனான பேச்சுவார்த்தையை முறியடிக்க முஷாரப் முயன்றதாக அப்போதைய பிரதமர் ஷெரீப்பின் உதவியாளர்கள் கூறினர். இந்தியா கார்கில் போரில் வென்ற பிறகு, பாகிஸ்தான் அதிகாரத்தைக் கைப்பற்றிய அவர், 2001ல் தன்னை தானே அதிபராக அறிவித்தார்.