LOADING...
அமீரகத்திடம் வாங்கிய $3.45 பில்லியன் கடனை அடைத்தது பாகிஸ்தான்; எப்படி?
அமீரகத்திடம் வாங்கிய $3.45 பில்லியன் கடனை அடைத்தது பாகிஸ்தான்

அமீரகத்திடம் வாங்கிய $3.45 பில்லியன் கடனை அடைத்தது பாகிஸ்தான்; எப்படி?

எழுதியவர் Venkatalakshmi V
Apr 24, 2026
04:54 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தான் அரசு ஐக்கிய அரபு அமீரகத்திடம் (UAE) வாங்கியிருந்த பெரும் கடனை ($3.45 பில்லியன்) திருப்பி செலுத்தியுள்ளது. பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பை நிலைப்படுத்த, 2018-ஆம் ஆண்டிலிருந்து அமீரகம் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதி வசதியை வழங்கி வந்தது. இதற்கு ஆண்டுக்கு சுமார் 6% வட்டி விதிக்கப்பட்டது. இந்தத் தொகையானது வழக்கமாக ஆண்டுதோறும் காலநீட்டிப்பு செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமீரக அரசு சில நிபந்தனைகளை மாற்றியது. ஆண்டு வாரியான காலநீட்டிப்புக்குப் பதிலாக, மாதாந்திர அடிப்படையில் மட்டுமே காலநீட்டிப்பு செய்யப்படும் என அமீரகம் அறிவித்தது. இந்தத் திடீர் கெடுபிடியால் ஏற்பட்ட அழுத்தத்தினால், பாகிஸ்தான் தனது மொத்தக் கடனையும் முழுமையாகச் செட்டில் செய்யத் தீர்மானித்தது.

வட்டி

விடுபட்டதா 450 மில்லியன் டாலர்?

பாகிஸ்தான் ஊடகங்கள் மற்றும் ராய்ட்டர்ஸ் செய்திகளின்படி, பாகிஸ்தான் அமீரகத்திற்கு வழங்க வேண்டிய மொத்தத் தொகை 3.5 பில்லியன் டாலர் என முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் கடந்த பல ஆண்டுகளாகச் செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்த 450 மில்லியன் டாலர் வட்டி மற்றும் பிற நிலுவைத் தொகைகளும் அடங்கும். இருப்பினும், பாகிஸ்தான் மத்திய வங்கி (SBP) தற்போது வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், 3.45 பில்லியன் டாலர் மட்டுமே திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால், அந்த நீண்டகால நிலுவைத் தொகையான 450 மில்லியன் டாலர் இந்தச் செட்டில்மென்ட்டில் சேர்க்கப்பட்டதா அல்லது அது இன்னும் நிலுவையில் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பின்னணி

பின்னணியில் இருக்கும் காரணங்கள்

அமீரகம் தனது நிதியைத் திரும்பக் கேட்டது பாகிஸ்தானுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. சவுதி அரேபியா வழங்கிய 2 பில்லியன் டாலர் வைப்புத்தொகை இல்லையென்றால், பாகிஸ்தானால் இந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்தியிருக்க முடியாது. ஈரான்-இஸ்ரேல் மோதல் சூழலில், அரபு நாடுகள் தங்களின் நிதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முற்படுவது பாகிஸ்தான் போன்ற கடன் வாங்கிய நாடுகளுக்குச் சவாலாக மாறியுள்ளது. பாகிஸ்தான் தனது கடனை திருப்பி செலுத்தியிருந்தாலும், நிலுவையில் உள்ளதாகக் கருதப்படும் அந்த 450 மில்லியன் டாலர் குறித்துத் தெளிவான விளக்கம் அளிக்கும் வரை, அந்நாட்டின் மீதான நிதி அழுத்தம் முழுமையாக நீங்கியதாகக் கருத முடியாது எனப் பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

Advertisement