தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு: ஆப்கானிஸ்தானை மிஞ்சிய பாகிஸ்தான்
பாகிஸ்தானில் வேகமாக வளர்ந்து வரும் பயங்கரவாதக் குழுவாக பலுசிஸ்தான் விடுதலைப் படை இருக்கிறது என்றும் பயங்கரவாதம் தொடர்பான இறப்புகள் 120% பாகிஸ்தானில் அதிகரித்துள்ளது என்றும் ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை பின்னுக்குத் தள்ளி தெற்காசியாவிலேயே அதிக தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் இறப்புகள் கொண்ட நாடாக பாகிஸ்தான் மாறியுள்ளது என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 643 பேர் பாகிஸ்தானில் பயங்கரவாதத்தால் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் பயங்கரவாத இறப்புகளின் எண்ணிக்கை கடந்த தசாப்தத்தில் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தது 55% பேர் ராணுவ வீரர்கள் ஆவர்.
தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தானை மிஞ்சிய பலுசிஸ்தான் விடுதலை இராணுவம்
பாகிஸ்தானில் பயங்கரவாதம் தொடர்பான இறப்புகளில் 36 சதவீதத்திற்கு பலுசிஸ்தான் விடுதலை இராணுவம்(BLA) பொறுப்பேற்றுள்ளது, இது முந்தைய ஆண்டை விட ஒன்பது மடங்கு அதிகமாகும். அறிக்கையின்படி, பாகிஸ்தான் தாலிபான் என்றும் அழைக்கப்படும் தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தானை(TTP) விட மிகக் கொடிய பயங்கரவாதக் குழுவாக பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் உருவெடுத்துள்ளது. 2022 இல் BLA தாக்குதலால் 233 இறப்புகள் ஏற்பட்டிருக்கிறது. அதில் 95 சதவீதம் பேர் இராணுவ வீரர்கள் ஆவர். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லையில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் சுதந்திரத்திற்காக போராடுவதாக BLA கூறிவருகிறது. BLA மற்றும் TTP ஆகிய இரண்டு அமைப்பையும் பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகள் தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.