4,800க்கும் மேற்பட்ட சிறார்களை வன்கொடுமை செய்த சர்ச் உறுப்பினர்கள்
போர்ச்சுகல் கத்தோலிக்க திருச்சபையில் கடந்த 70 ஆண்டுகளில் 4,800க்கும் மேற்பட்ட சிறார்களை அந்த திருச்சபையின் உறுப்பினர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 512 பேர் ஏற்கனவே சாட்சி கூற முன்வந்துள்ளனர் என்று தேவாலயத்தில் வரலாற்று வன்கொடுமை குறித்து ஆராயும் நிபுணர் குழு இன்று(பிப் 13) தெரிவித்துள்ளது. மூத்த போர்த்துகீசிய தேவாலய அதிகாரிகள், ஒரு சில வழக்குகள் மட்டுமே நடந்ததாகக் முன்பு கூறி இருந்தனர். நிபுணர் குழுவின் 500 பக்க அறிக்கையை தேவாலய அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே அதிகாரபூர்வ பதில் அளிக்கப்படும் என்று போர்த்துகீசிய பிஷப்கள் மாநாட்டின் தலைவர் பிஷப் ஜோஸ் ஓர்னெலாஸ் கூறி இருக்கிறார்.
25 வழக்குகள் மட்டுமே வழக்காட அனுப்பட்டுள்ளன
கத்தோலிக்க திருச்சபையில் சிறுவர் வன்கொடுமை பற்றிய ஆய்வுக்கான சுயாதீனக் குழு, போர்த்துகீசிய பிஷப்களால் ஒரு வருடத்திற்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் 1950ஆம் ஆண்டு முதல் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்குகளை ஆய்வு செய்தனர். போர்த்துகீசிய பிஷப்கள் அடுத்த மாதம் இந்த அறிக்கையை விவாதிக்க உள்ளனர். தேவாலய ஆவண காப்பகங்களுக்கு அனுமதி வழங்க வாட்டிகன் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டதற்கு குழு வருத்தம் தெரிவித்திருந்தது. கடந்த அக்டோபர் மாதம் வன்கொடுமைக் குறித்த எழுத்துப்பூர்வ ஆதாரங்களை ஆராய மூன்று மாதங்கள் மட்டுமே குழுவுக்கு அனுமதி கிடைத்தது. கூறப்படும் வழக்குகளில் பெரும்பாலானவற்றின் வரம்புகள் காலாவதியாகிவிட்டது. 25 குற்றச்சாட்டுகள் மட்டுமே வழக்கறிஞர்களுக்கு அனுப்பப்பட்டன என்று குழு கூறியுள்ளது.