Page Loader
ரஷ்யாவில் உள்ள தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல்: பாதிரியார் உட்பட 15 பேர் பலி

ரஷ்யாவில் உள்ள தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல்: பாதிரியார் உட்பட 15 பேர் பலி

எழுதியவர் Sindhuja SM
Jun 24, 2024
10:09 am

செய்தி முன்னோட்டம்

ரஷ்யாவின் தெற்கு குடியரசின் தாகெஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறையினர், ஒரு ஆர்த்தடாக்ஸ் பாதிரியார் மற்றும் பொதுமக்கள் உட்பட 15 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். டெர்பென்ட் மற்றும் மகச்சலா நகரங்களில் உள்ள தேவாலயங்கள், ஜெப ஆலயங்கள் மற்றும் போலீஸ் போக்குவரத்து நிறுத்தம் ஆகியவற்றில் தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். டெர்பென்ட் மற்றும் மகச்சலா ஆகியவை சுமார் 120 கிமீ தொலைவில் அமைந்துள்ள இருவேறு நகரங்கள் ஆகும். ரஷ்யாவின் காஸ்பியன் கடலில் அமைந்துள்ள டெர்பென்ட் நகரில் இருக்கும் ஜெப ஆலயம் மற்றும் தேவாலயம் மீது ஆயுதமேந்திய குழு ஒன்று துப்பாக்கிச் சூடு நடத்தியது.

ரஷ்யா 

பாதிரியாரின் கழுத்தை அறுத்து கொன்ற பயங்கரவாதிகள் 

அதைத் தொடர்ந்து இரண்டு கட்டிடங்கள் தீப்பிடித்ததாக தாகெஸ்தானின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், தாகெஸ்தான் தலைநகர் மகச்சலாவில் உள்ள ஒரு தேவாலயம் மற்றும் போக்குவரத்து காவல் நிலையத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில், ஏழு சட்ட அமலாக்க அதிகாரிகள், ஒரு பாதிரியார் மற்றும் ஒரு தேவாலய பாதுகாவலர் ஆகியோர் உள்ளனர். செய்திகளின்படி, ஆயுதமேந்தியவர்கள் டெர்பென்ட்டில் உள்ள தேவாலயத்தில் இருந்த பாதிரியார் நிகோலேயின் கழுத்தை அறுத்துள்ளனர். அதே நேரத்தில் அந்த தேவாலயத்தை சேர்ந்த பாதுகாவலர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட சட்ட அமலாக்க அதிகாரிகளில் ஒருவர் 'தாகெஸ்தான் லைட்ஸ்' காவல் துறையின் தலைவர் என்று தாகெஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.