AI-யால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.. உலக பொருளாதார மன்றம் ஆய்வு!
செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பங்களால் வேலை வாய்ப்புகள் பறிபோகும் என்ற அச்சம் அதிகரித்து வரும் நிலையில், AI-யால் பல புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என உலக பொருளாதார மன்றம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. உலகம் முழுவதும் 45 வேறுபட்ட பொருளாதாரங்களில் இருந்து 27 தொழில் குழுக்களில் இருக்கும் 803 நிறுவனங்களிடம் ஆய்வொன்றை நடத்தியது உலகப் பொருளாதார மன்றம். ஒட்டுமொத்தமாக 11.3 மில்லியன் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். AI உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களால் உலகம் முழுவதும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 69 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாகம் எனத் அதன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது உலகப் பொருளாதார மன்றம். அதேநேரம், 2027-ம் ஆண்டிற்குள் 83 மில்லியன் வேலைவாய்ப்புகள் பறிபோகும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வேவை வாய்ப்பு சந்தை நிலவரம்:
இந்திய வேலை வாய்ப்பு சந்தை 22% வரை வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. AI, மெஷின் லேர்னிங் மற்றும் தகவல்துறை ஆகியவை வேலை வாய்ப்பு பெருக்கத்தில் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. ESG ஸ்டாண்டர்டை பரவலாக்குவதன் மூலம் வேலைவாய்ப்புகள் வளர்ச்சியடையும் என 61% நிறுவனங்கள் கருத்து தெரிவித்திருக்கின்றன. புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்வது மற்றும் டிஜிட்டல் அணுகலை மேம்படுத்துவதன் மூலம் வேலைவாய்ப்பு துறை வளரச்சியடையும் என முறையே 59% மற்றும் 55% நிறுவனங்கள் கருத்து தெரிவித்திருக்கின்றன. ஆய்வில் பங்கெடுத்த 75% நிறுவனங்கள் தங்களது நடவடிக்கைகளில் AI-யை பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்திருக்கின்றன. இந்தியாவில் கல்வி மற்றும் விவசாயத்தில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக உலகப் பொருளதார மன்றம் தெரிவித்துள்ளது.