நேபாள பொதுத்தேர்தல் 2026: வன்முறை போராட்டங்களுக்கு பிறகு இன்று வாக்குப்பதிவு
செய்தி முன்னோட்டம்
நேபாளத்தில் கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட வீதி போராட்டங்கள் மற்றும் அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, புதிய நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. நேபாள நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. கடந்த 2025 செப்டம்பர் மாதம் நேபாளத்தில் ஊழல் மற்றும் குடும்ப அரசியலுக்கு எதிராக 'Gen Z' எனப்படும் இளம் தலைமுறையினர் நடத்திய மாபெரும் போராட்டத்தை தொடர்ந்து, கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. சுமார் 75 பேர் பலியான அந்த வன்முறை போராட்டங்களுக்குப் பிறகு, இடைக்கால பிரதமர் சுஷிலா கார்க்கி தலைமையில் இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது. இது பழைய அரசியல்வாதிகளுக்கும், மாற்றத்தை விரும்பும் இளைஞர்களுக்கும் இடையிலான நேரடிப் போராகப் பார்க்கப்படுகிறது.
நிலவரம்
தேர்தல் கள நிலவரம்
275 உறுப்பினர்களை கொண்ட பிரதிநிதிகள் சபைக்கு 18.9 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். இதில் 165 இடங்கள் நேரடியாகவும், 110 இடங்கள் விகிதாசார முறையிலும் தேர்ந்தெடுக்கப்படும். மொத்தம் 65 அரசியல் கட்சிகள் களத்தில் உள்ளன. பாதுகாப்புப் பணியில் 3 லட்சத்திற்கும் அதிகமான வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு முடிந்தவுடன் இன்று இரவே வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு, 24 மணி நேரத்திற்குள் முக்கிய முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 75 வயதான முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி மீண்டும் நிலைத்தன்மை என்ற முழக்கத்துடன் களமிறங்குகிறார். அவரை எதிர்த்து 'ராஷ்டிரிய ஸ்வதந்த்ரா கட்சி' (RSP) சார்பில் காத்மாண்டு மேயரும், முன்னாள் ராப் பாடகருமான 35 வயது பாலேந்திர ஷா ஜாப்பா-5 தொகுதியில் நேரடியாக போட்டியிடுகிறார்.