நேபாளத்தில் திடீர் பெருவெள்ளம்: 57 தமிழர்கள் உட்பட 400 இந்தியர்கள் தவிப்பு; அவசர உதவி எண்கள் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
நேபாள நாட்டின் வடக்கு ராசுவா பகுதியில் தொடர் கனமழை மற்றும் பனிப்பாறைகள் உருகியதன் காரணமாக போட்டே கோஷி ஆற்றில் திடீரென பேரழிவு தரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த எதிர்பாராத இயற்கை பேரிடரில் பல கிராமங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதில் புனிதப் பயணம் மற்றும் சுற்றுலா சென்ற 57 தமிழர்கள் உட்பட 400க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்த வெள்ளத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழர்கள்
வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்: 22 பேர் பத்திரமாக மீட்பு
தமிழகத்திலிருந்து நேபாளத்திற்கு சென்ற சென்னை, கும்பகோணம், திருச்சி மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த 57 பயணிகள் ராசுவா மாவட்டத்தின் திமுர் பகுதியில் சிக்கியுள்ளனர்.
கும்பகோணத்தை சேர்ந்த பயணிகள் சென்ற பேருந்து வெள்ளத்தில் சிக்கிய போதிலும், அதிர்ஷ்டவசமாக அவர்கள் தப்பித்து ராணுவ முகாமில் தஞ்சமடைந்தனர்.
இதில் 22 தமிழர்கள் நேபாள ராணுவத்தினரால் பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
எஞ்சியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சேத விபரம்
உள்கட்டமைப்பு சேதம் மற்றும் 384 பேர் மாயம்
வெள்ளத்தின் வீரியம் காரணமாகப் பாலங்கள், 40 கிலோமீட்டர் நீள சாலைகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டுப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
நேபாள சுற்றுலா வாரியத்தின் தகவல்படி 291 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 384 பேர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தரையிறங்க இடமில்லாத நிலையிலும், நேபாள ராணுவத்தினர் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி மீட்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
அவசர உதவி
தமிழக அரசு மற்றும் நேபாளத்தின் அவசர உதவி எண்கள்
சிக்கியுள்ள தமிழர்களைப் பாதுகாப்பாக மீட்க வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை மற்றும் இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தகவல்களைப் பெறத் தமிழக அரசு அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது:
கட்டணமில்லா உதவி எண்: 1800 309 3793
நேரடி தொடர்பு எண்: 80690 09901
மிஸ்டு கால் சேவை: 080690 09900
நேபாள சுற்றுலா அவசர எண்: 1234 / 1144