நேபாளத்தில் மீண்டும் பெருவெள்ள அபாயம்? பனிப்பாறை சரிவே பேரழிவுக்குக் காரணம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஆற்றின் மேல் பகுதியில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக மீண்டும் ஒரு பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிலவியல் மற்றும் பருவநிலை நிலவியல் மையங்கள் எச்சரித்துள்ளன. காத்மாண்டுவை தளமாக கொண்ட ICIMOD வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், நேபாள-சீன எல்லைக்கு அருகில் ஆற்றின் மேல் பகுதியில் இன்னும் பெரிய அளவிலான பனி மற்றும் பாறை இடிபாடுகளின் அடைப்பு அப்படியே உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது மீண்டும் உடைந்தால், ஜிாலாங் துறைமுகம் மற்றும் கீழ்நோக்கிய பகுதிகளான நுவாகோட், தாடிங் மாவட்டங்கள் மீண்டும் கடுமையாக பாதிக்கப்படலாம் என்பதால் அங்கிருந்து மக்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
காரணம்
நிலநடுக்கம் அல்ல; பனிப்பாறை சரிவே காரணம்
ஆரம்பத்தில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இந்த வெள்ளம் ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நிலையை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) மறுத்துள்ளது.
லெண்டே கோலா பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை மற்றும் பாறைகளின் நிலச்சரிவே நில அதிர்வு அலைகளை உருவாக்கியுள்ளது.
இந்தச் சரிவால் தேங்கிய நீர் ஒரே நேரத்தில் உடைந்ததால், வெறும் 30 நிமிடங்களில் திரிசூலி ஆற்றில் நீர்மட்டம் 9 மீட்டர் வரை சட்டென்று உயர்ந்து பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெள்ளத்தில் 340 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 400-க்கும் மேற்பட்டோர் இன்னும் மாயமாகியுள்ளனர்.
கைலாஷ் மானசரோவர் செல்லும் பாதையில் இந்த இயற்கைச் சீற்றம் ஏற்பட்டுள்ளதால், மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.