ஆட்சிக்கவிழ்ப்பு நடந்து 2 வருடங்களுக்கு பின் தேர்தலுக்கு தயாராகும் மியான்மர்
2020ஆம் ஆண்டில் மியான்மரில் ஆட்சிகவிழ்ப்பு நடந்தது. அப்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான ஆங் சான் சூகி என்பவரை சிறைபிடித்த ராணுவம், ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில், மியான்மரை ஆட்சி செய்து வரும் ராணுவ அரசு தற்போது தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளது. ராணுவ அரசிற்கு எதிர்ப்பு அதிகமாக இருப்பதால், இந்த தேர்தலினால் வன்முறை வெடிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். தற்போதைய சூழ்நிலையில் திட்டமிடப்பட்ட வாக்கெடுப்பு சுதந்திரமாகவும் நியாயமாகவும் இருக்காது என்று பார்வையாளர்கள் அஞ்சுகிறார்கள். விமர்சகர்கள் இதை ராணுவ அரசின் "நடிப்பு" என்று விமர்சித்துள்ளனர். ஆதிக்கத்தில் இருக்கும் ராணுவ அரசின் அதிகாரத்தை நியாயப்படுத்துவதற்காக இது நடத்தப்படுகிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து வரும் மக்கள்
2020இல் நடந்த தேர்தலில் ஜனநாயகப் பிரமுகர் ஆங்-சான்-சூகியின் கட்சி வெற்றி பெற்றது. அப்போது நடந்த தேர்தலில் வாக்காளர் மோசடி நடைபெற்றதாக ஆங்-சான்-சூகியின் மீது குற்றம் சாட்டிய ராணுவம், பிப்ரவரி 1, 2021அன்று அதிகாரத்தைக் கைப்பற்றியது. இவை நிரூபிக்கப்படவில்லை என்றாலும், சூகி மற்றும் பிற உயர்மட்ட அரசியல் தலைவர்களை ராணுவம் சிறைபிடித்தது. இந்நிலையில், அரசியலமைப்பின் படி இராணுவம் இந்த ஆண்டு இறுதியில் ஒரு புதிய தேர்தலை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதிகம் மக்கள் ராணுவ அரசாங்கத்திற்கு எதிர்ப்பை தெரிவித்து வருவதால், மக்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்வார்களா என்பது பெரிய கேள்வியாகவே இருக்கிறது என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள். அப்படி ஏதும் நடந்தால் மீண்டும் நாட்டிற்குள் இரத்தக்களரி ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தையும் சிலர் வெளிப்படுத்தியுள்ளனர்.