காணாமல் போன இந்தோனேசியப் பெண்ணின் உடல் ராட்சத மலைப்பாம்பின் வயிற்றில் இருந்து மீட்பு
கடந்த வியாழன் அன்று காணாமல் போன இந்தோனேசியாவைச் சேர்ந்த 45 வயது பெண், 16 அடி நீளமுள்ள ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பின் வயிற்றில் இருந்து நேற்று சடலமாக மீட்கப்பட்டார். தெற்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள கலெம்பாங் கிராமத்தை ஃபரிதா என்பவருக்கு இந்த அவலம் நடந்துள்ளது. அந்த பெண்ணின் கணவரும் சக கிராமவாசிகளும் சேர்ந்து இந்த அதிர்ச்சிகரமான விஷயத்தை கண்டுபிடித்தனர். " ஃபரிதா காணாமல் போனதும் அவரது கணவர் சந்தேகமடைந்தார். பின் அவரது உடமைகள் கண்டுபிடிக்கப்பட்டதால் மேலும் சந்தேகம் அதிகரித்தது. அதன் பிறகு நடத்தப்பட்ட தேடலின் விளைவாக இந்த பயங்கரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது" என்று அந்த கிராமத்தின் தலைவர் சுர்தி ரோசி கூறியுள்ளார்.
அபாயகரமான மலைப்பாம்பு தாக்குதல்கள்
தேடுதலின் போது, வழக்கத்திற்கு மாறாக பெரிய வயிற்றுடன் ஒரு மலைப்பாம்பு இருப்பதை அந்த கிராமவாசிகள் கவனித்தனர். அதனைத்தொடர்ந்து, தங்கள் சந்தேகத்தை போக்க, கிராமவாசிகள் அந்த மலைப்பாம்பின் வயிற்றை வெட்டினர். "மலைப்பாம்பின் வயிற்றை வெட்டியதும், ஃபரிதாவின் தலை உடனடியாகத் தெரிந்தது," என்று கிராமத்தின் தலைவர் சுர்தி ரோசி கூறியுள்ளார். ஃபரிதா அந்த பாம்பின் வயிற்றில் இருந்து முழு ஆடையுடன் சடலமாக மீட்கப்பட்டார். இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் அரிதாகக் கருதப்பட்டாலும், இந்தோனேசியாவில் இது சகஜமான விஷயமாகும். மலைப்பாம்புகள் தனிநபர்களை முழுவதுமாக விழுங்குவதால் பல உயிரிழப்புகள் அங்கு ஏற்பட்டுள்ளன. கடந்த ஆண்டில், தென்கிழக்கு சுலவேசி மாவட்டத்தின், டினாங்கேயா மாவட்டத்தில் ஒரு விவசாயியை முழுவதுமாக விழுங்கிக் கொண்டிருந்த ஒரு எட்டு மீட்டர் மலைப்பாம்பு கொல்லப்பட்டது.