மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் கிளாடியா ஷீன்பாம்
ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் 61 வயதான மெக்சிகோ நகரத்தின் முன்னாள் மேயர் 60% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக மெக்சிகோவின் அதிகாரப்பூர்வ தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது அவரது முக்கிய போட்டியாளரான தொழிலதிபர் ஸோசிட் கால்வேஸை விட கிட்டத்தட்ட 30 சதவீத புள்ளிகள் முன்னிலையில் உள்ளது. கிளாடியா ஷீன்பாம் அக்டோபர் 1 ஆம் தேதி தனது வழிகாட்டியும், முன்னாள் அதிபருமான ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடருக்கு அடுத்த அதிபராக பதவியேற்பார். முன்னாள் எரிசக்தி விஞ்ஞானியான ஷீன்பாம், முன்னாள் அதிபர் லோபஸ் ஒப்ரடோர் செய்த "முன்னேற்றங்களை" தொடர்ந்து முன்னெடுத்து செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார்.
விஞ்ஞானியாக இருந்த கிளாடியா ஷீன்பாம்
"நான் உங்களது நம்பிக்கையை வீணடிக்க மாட்டேன்" என்று கிளாடியா ஷீன்பாம் தனது வெற்றி உரையில் வாக்காளர்களிடம் கூறினார். அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்கு முன்னர், கிளாடியா ஷீன்பாம் மெக்ஸிகோ நகரத்தின் மேயராக இருந்தார். இது நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல் பதவிகளில் ஒன்றாகும். மேலும், இது அவரது அதிபர் பதவிக்கு வழி வகுத்ததாகக் கருதப்படுகிறது. நாஜிகளிடமிருந்து தப்பி பல்கேரியாவிலிருந்து மெக்ஸிகோவிற்கு குடிபெயர்ந்த யூதர்கள் ஷீன்பாமின் தாய்வழி தாத்தா பாட்டி ஆவர். அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு இவர் ஒரு விஞ்ஞானியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தந்தைவழி தாத்தா பாட்டி லிதுவேனியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். மேலும், அவரது பெற்றோர் இருவரும் விஞ்ஞானிகள் ஆவர்.