அமெரிக்கா: ஹவாய் காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89ஆக உயர்வு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா: மௌயி காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் சனிக்கிழமை(ஆகஸ்ட் 12) தெரிவித்தனர்.
கடந்த நூற்றாண்டில் அமெரிக்காவில் பதிவான மிக பெரும் காட்டுத்தீ இதுவாகும்.
சனிக்கிழமையன்று, உயிரிழந்தவர்களின் சடலங்கள் மோப்பம் பிடிக்கும் நாய்களின் உதவியுடன் மீட்கப்பட்டன. இதனால் எவ்வளவு உயிர் சேதம் ஏற்பட்டது என்பது ஓரளவு கணக்கிடப்பட்டது.
நான்கு நாட்களாக ஹவாய் தீவில் பற்றி எரியும் காட்டுத்தீயால் லஹைனா என்ற ரிசார்ட் நகரத்தில் இருந்த கட்டிடங்கள் மற்றும் கார்கள் அனைத்தும் தீக்கிரையாகின.
லஹைனாவில் 2,200 க்கும் மேற்பட்ட கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன/அழிந்தன. 2,100 ஏக்கருக்கும் அதிகமான (850 ஹெக்டேர்) நிலங்கள் தீக்கிரையாகியது.
லஹைனாவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு $5.5 பில்லியன் செலவாகும் என்று ஃபெடரல் எமர்ஜென்சி மேனேஜ்மென்ட் ஏஜென்சி(FEMA) மதிப்பிட்டுள்ளது.
திஜுவ்
'இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும்': ஆளுநர் ஜோஷ் கிரீன்
உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்படுவதால் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என்று அம்மாநிலத்தின் ஆளுநர் ஜோஷ் கிரீன் சனிக்கிழமை பிற்பகல் ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
தீயில் இருந்து தப்பியவர்கள் பலர் தங்களுக்கு எச்சரிக்கை சைரன்கள் எதுவும் கேட்கவில்லை என்றும், எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
அதனால், இதில் இருந்து தப்பிக்க சிலர் பசிபிக் பெருங்கடலில் குதித்து தங்கள் உயிரை காப்பற்றி இருக்கின்றனர்.
இதனையடுத்து, மாநிலத்தின் அவசர எச்சரிக்கை அமைப்புகளை ஆய்வு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
அவசர காலத்தில் ஒலிக்கவிடப்படுவதற்காக ஹவாய் தீவு முழுவதும் ஆங்காங்கே சைரன்கள் பொருத்தப்பட்டிருந்தன. ஆனால், மின் தடை மற்றும் செல்லுலார் செயலிழப்புகள் காரணமாக இவை ஆபத்தில் இருந்த மக்களை சென்றடையவில்லை என்று கூறப்படுகிறது.