ஏஐ பயன்படுத்தி நேபாள பேரழிவு நிவாரணம் என்ற பெயரில் மோசடி; பணம் சுருட்டியவர் கைது
செய்தி முன்னோட்டம்
நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட கடுமையான போதேகோஷி வெள்ளப் பெருக்கிற்குப் பிறகு, நிவாரண நிதி திரட்டும் போர்வையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்ட 32 வயது நபரை நேபாள காவல்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது. ராமேசாப் மாவட்டத்தை சேர்ந்த பகவான் கார்க்கி என்ற நபர், சாட்ஜிபிடி செயலியைத் தவறாக பயன்படுத்தி போலி நன்கொடை ரசீதை உருவாக்கி, பொதுமக்களின் நிவாரண நிதியை தனது சொந்த வங்கிக் கணக்கிற்கு திருப்ப முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலி ரசீது
போலி ரசீது மற்றும் சொந்த க்யூஆர் கோட் பயன்பாடு
கைது செய்யப்பட்ட பகவான் கார்க்கி, நேபாள பிரதமரின் பேரிடர் நிவாரண நிதியத்திற்கு தான் 1,20,000 நேபாள ரூபாய்களை (சுமார் $782 டாலர்கள்) நன்கொடையாக வழங்கியது போல இ-சேவா செயலியின் போலி பரிவர்த்தனை ரசீதை சாட்ஜிபிடி மூலம் தயாரித்துள்ளார்.
பின்னர் அந்த போலி ரசீதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தானொரு மிகப்பெரிய நன்கொடையாளர் போலக் காட்டியுள்ளார்.
அத்துடன், நிவாரண நிதி அளிக்க விரும்புபவர்கள் பணம் செலுத்த போலி பதிவின் கீழே தனது சொந்த இ-சேவா மற்றும் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட க்யூஆர் கோடைப் பகிர்ந்து பொதுமக்களை ஏமாற்றியுள்ளார்.
கைது
காவல்துறையின் அதிரடி நடவடிக்கை மற்றும் கைது
சமூக வலைதளங்களில் பரவிய இந்த சந்தேகத்திற்கிடமான க்யூஆர் கோட் குறித்து ராமேசாப் மாவட்டக் காவல் துறை விசாரணை நடத்தியதில், அது நிவாரண நிதியத்திற்கு செல்லாமல் தனிநபரின் கணக்கிற்கு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் கமல் ராவத் தலைமையிலான அதிகாரிகள், டிஜிட்டல் முறைகேடு மற்றும் நிதி மோசடி சட்டங்களின் கீழ் பகவான் கார்க்கியை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வெள்ளப் பெருக்கால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்து, பெரும் உட்கட்டமைப்பு இழப்புகளை சந்தித்துள்ள சூழலில், இந்த ஏஐ மோசடி சம்பவம் நேபாளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு எச்சரிக்கை
அரசு வெளியிட்ட அவசர எச்சரிக்கை அறிவிப்பு
நேபாளத்தில் இயற்கை சீற்றங்களின் போது ஏஐ தொழில் நுட்பங்கள் மற்றும் போலியான க்யூஆர் கோட்களைப் பயன்படுத்தி டிஜிட்டல் நிதி மோசடிகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, நேபாள அரசம் காவல்துறையும் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளன.
பொதுமக்கள் எக்காரணத்தைக் கொண்டும் சமூக வலைதளங்களில் வரும் தனிநபர் க்யூஆர் கோட்களுக்குப் பணம் அனுப்ப வேண்டாம் என்றும், அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் பிரதம மந்திரியின் பேரிடர் நிவாரண நிதி பெயரில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கி கணக்குகளுக்கு மட்டுமே நேரடியாக நன்கொடைகளை வழங்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.