அமெரிக்க கடற்படை செயலாளர் திடீர் நீக்கம்! ஈரானுடன் போர் பதற்றம் நீடிக்கும் சூழலில் பென்டகன் அதிரடி
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க கடற்படை செயலாளர் ஜான் வேலன் தனது பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாகப் பென்டகன் அறிவித்துள்ளது. ஈரானுடனான கடல்வழி முற்றுகை மற்றும் போர் பதற்றம் உச்சத்தில் இருக்கும் வேளையில், இந்தத் திடீர் தலைமை மாற்றம் சர்வதேச ராணுவ வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பென்டகன் செய்தித் தொடர்பாளர் சீன் பார்னெல் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஜான் வேலன் நிர்வாகத்திலிருந்து உடனடியாக வெளியேறுவதாகத் தெரிவித்துள்ளார். இதற்கான தெளிவான காரணங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. ஜான் வேலன் விலகியதைத் தொடர்ந்து, கடற்படை துணைச் செயலாளர் ஹங் காவ் தற்காலிகக் கடற்படை செயலாளராகப் பொறுப்பேற்றுள்ளார். வாஷிங்டனில் நடைபெற்ற கடற்படையின் வருடாந்திர மாநாட்டில் ஜான் வேலன் உரையாற்றிய ஒரு நாளுக்குள்ளேயே இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
🚨 JUST IN: Navy Secretary John Phelan is DEPARTING the Trump administration, effective immediately, per the Pentagon
— Nick Sortor (@nicksortor) April 22, 2026
Undersecretary HUNG CAO has now stepped into the role as Acting Secretary of the Navy
Cao is a true, communist-hating PATRIOT 🇺🇸 pic.twitter.com/Yv7U7brH7c
தலைமை மாற்றங்கள்
பென்டகனின் தலைமை மாற்றங்கள் மற்றும் உள்நாட்டு அரசியல்
ஜான் வேலனின் வெளியேற்றம், அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் பீட் ஹெக்செத் தலைமையிலான தொடர் மாற்றங்களின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ராணுவத் தளபதி ராண்டி ஜார்ஜ் உள்ளிட்ட பல உயர்நிலை ராணுவ அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். ஜான் வேலன் ஒரு தொழிலதிபர் மற்றும் டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதி வழங்கியவர் ஆவார். 2024-இன் இறுதியில் டிரம்ப் இவரை நியமித்தபோது, ராணுவ அனுபவம் இல்லாதது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. தற்போது ஹெக்செத் மற்றும் வேலன் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகவே இவர் நீக்கப்பட்டிருக்கலாம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹங் காவ்
புதிய தற்காலிக செயலாளர் ஹங் காவ்
தற்போது பொறுப்பேற்றுள்ள ஹங் காவ், 25 ஆண்டுகாலக் கடற்படை அனுபவம் கொண்டவர். ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் சோமாலியா போன்ற போர்க்களங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. வியட்நாமிலிருந்து அகதியாக அமெரிக்காவிற்கு வந்த இவர், டிரம்பின் தீவிர ஆதரவாளர் ஆவார். 2024-ஆம் ஆண்டு விர்ஜினியா மாகாண செனட் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது அனுபவம் தற்போதைய போர்ச் சூழலில் அமெரிக்கக் கடற்படையை வழிநடத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தற்காலிகப் போர்நிறுத்தம் நிலவி வந்தாலும், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கக் கடற்படையின் முற்றுகை தீவிரமாகத் தொடர்கிறது. இத்தகைய இக்கட்டான போர்ச் சூழலில் கடற்படையின் உயர் மட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், அமெரிக்காவின் அடுத்தகட்ட ராணுவ உத்திகளில் மாற்றத்தை ஏற்படுத்தக்கக்கூடும்.