கலிபோர்னியா சம்பவம்: பொறாமையினால் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கலாம்
கடந்த சனிக்கிழமை இரவு 10 மணியளவில் கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி பார்க் நடன ஸ்டுடியோவில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த சம்பவத்தால் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 10 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கின் சந்தேக நபர் ஹூ கேன் டிரான்(72) நேற்று(ஜன 23) டோரன்ஸ் நகரில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார். இவரது உடலில் தற்கொலை செய்து கொண்டதற்கான அடையாளங்கள் இருந்தன. இந்நிலையில், இவர் எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார் என்பதை புலனாய்வாளர்கள் விசாரித்து வருகின்றனர். ஆசியாவில் இருந்து அமெரிக்காவிற்கு குடியேறிய ஒருவர் ஏன் புத்தாண்டு விழாவில் துப்பாக்கி சூடு நடத்த வேண்டும் என்பதற்கான காரணம் இன்னும் சரியாக தெரியவில்லை.
வருத்தத்தாலும் பொறாமையாலும் இப்படி செய்தாரா?
தானியங்கி துப்பாக்கியைப் பயன்படுத்தி, 50, 60 மற்றும் 70 வயது மதிக்கத்தக்க ஆண்களையும் பெண்களையும் அவர் கொன்றதாக கூறப்படுகிறது. 1994இல் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட டிரான், இந்த தாக்குதலில் 42முறை சுட்டிருக்கிறார் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் ராபர்ட் லூனா கூறி இருக்கிறார். "இதை அவர் செய்ததற்கான காரணம் தெரியவில்லை, ஆனால் இந்த சோகமான நிகழ்வின் பின்னணியில் உள்ள நோக்கத்தை நாங்கள் அறிய விரும்புகிறோம்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அவரை புத்தாண்டு பார்ட்டிக்கு அழைக்காததால் அவர் "வருத்ததாலும் பொறாமையாலும்" இப்படி செய்திருக்கலாம் என்று மான்டேரி பார்க்கில் குடியிருக்கும் செஸ்டர்ஹாங் தெரிவித்திருக்கிறார். துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை டிரானுக்கு ஏற்கனவே தெரியும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.