கடலோர காவல்படை விமானத்தின் மீது மோதி தீப்பிடித்த ஜப்பான் விமானம்: 5 பேர் பலி
டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுபாதையில் இன்று ஒரு ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்து எரிந்ததால் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். ஏர்பஸ் விமானத்தில் இருந்த 367 பயணிகளும் 12 பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். கொல்லப்பட்ட 5 பேரும் கடலோர காவல்படை விமானத்தில் இருந்தவர்கள் ஆவர். கடலோர காவல்படை விமானத்தில் இருந்த ஆறு பணியாளர்களில் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டார். ஆனால் மற்ற ஐந்து பேரும் பலியாகினர். இந்த விபத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. ஆனால் பயணிகள் விமானம் கடலோர காவல்படை விமானத்தின் மீது மோதியதாக தொலைக்காட்சி செய்திகள் கூறுகின்றன. மத்திய ஜப்பானில் நேற்று ஏற்பட்ட பெரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மீட்புப் பணிகளுக்கு உதவ கடலோர காவல்படை விமானம் புறப்படதிட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
70க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன
ஜப்பானின் வடக்கு தீவான ஹொக்கைடோவில் உள்ள சப்போரோ விமான நிலையத்திலிருந்து அந்த விமானம் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் ஓடுபாதையில் இறங்கியதும் டாக்ஸிவேயில் மற்ற விமானத்தை மோதி இருக்கலாம் என்று பேசப்படுகிறது. ஜப்பானின் நிலம், போக்குவரத்து மற்றும் சுற்றுலா அமைச்சகம் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளது. இந்த விபத்தை அடுத்து ஓடுபாதையில் எரியும் குப்பைகள் விழுந்து கிடப்பதால் அந்த விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும், 70க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. பல தசாப்தங்களாக, ஜப்பானில் எந்த பெரிய விமான விபத்துகளும் ஏற்படவில்லை. கடைசியாக, 1985ஆம் ஆண்டில், டோக்கியோவிலிருந்து ஒசாகாவிற்குப் பறந்த JAL ஜம்போ ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் 520 பயணிகள் கொல்லப்பட்டனர்.