அமெரிக்கா -ஈரான் பேச்சுவார்த்தை முறிவு: பாகிஸ்தான் கூட்டத்தைப் புறக்கணித்த ஈரான்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தானில் நடைபெறவிருந்த இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கப் போவதில்லை என்று ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏப்ரல் 22-ம் தேதியுடன் தற்காலிகப் போர்நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், ஈரானின் இந்த முடிவு மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்களைச் சூழச் செய்துள்ளது. ஈரானிய செய்தி நிறுவனமான 'IRNA' வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்காவின் "அதிகப்படியான கோரிக்கைகள்" மற்றும் "நடைமுறைக்கு மாறான எதிர்பார்ப்புகள்" காரணமாக இந்தப் பேச்சுவார்த்தையைப் புறக்கணிப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நிலைப்பாடு "சிறுபிள்ளைத்தனமாக" இருப்பதாகவும், ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே மறுபுறம் கடற்படை முற்றுகையை தொடர்வது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்றும் ஈரானின் முதல் துணைத் தலைவர் முகமது ரெசா ஆரிப் சாடியுள்ளார்.
அமெரிக்கா
டொனால்ட் டிரம்பின் கடும் எச்சரிக்கை
ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராத நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் மிகக் கடுமையான மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார். "அமெரிக்கா வழங்கும் ஒப்பந்தத்தை ஈரான் ஏற்கவில்லை என்றால், ஈரானில் உள்ள ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையமும் மற்றும் ஒவ்வொரு பாலமும் தரைமட்டமாக்கப்படும். ஈரானின் கொலை இயந்திரத்தை நாங்கள் முடிவுக்குக் கொண்டு வருவோம்," என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். பேச்சுவார்த்தை முறிந்ததைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. உலகின் 20% எண்ணெய் விநியோகம் நடைபெறும் இந்த ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால், நூற்றுக்கணக்கான கப்பல்கள் கடலின் இருபுறமும் தவித்து வருகின்றன. சனிக்கிழமை அன்று இந்தியக் கொடியுடன் சென்ற இரண்டு வணிகக் கப்பல்கள் மீது ஈரானியப் படகுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
முட்டுக்கட்டைகள்
முக்கிய முட்டுக்கட்டைகள்
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் ஆழமான அவநம்பிக்கையே அமைதிக்குத் தடையாக இருப்பதாக அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தெரிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தித் திட்டம், ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளுக்கான ஆதரவு மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மீதான கட்டுப்பாடு ஆகிய விவகாரங்களில் இரு தரப்பும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை.