2000 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டது ஈரான் அதிபரின் உடல்: உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக ஈரான் அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது. ஈரான் அதிபர் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோல்ஹியன் மற்றும் பிற மூத்த அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் யாரும் உயிர் பிழைத்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலைக்கு மத்தியில் ஒரு மலைப் பகுதிகளில் பல மணி நேரம் தேடுதல் நடவடிக்கை நடைபெற்றதை அடுத்து, 2000 மீட்டர் ஆழத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்தனர். "விபத்தில் அதிபர் ரைசியின் ஹெலிகாப்டர் முற்றிலும் எரிந்துவிட்டது" என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்டவர்களின் உடல்கள் தப்ரிஸ் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டது
இந்த ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை ஈரானின் வடமேற்கு மலைப் பகுதியில் உள்ள ஜோல்பாவில் விழுந்து நொறுங்கியது. அதிபர் ரைசியும் மற்றவர்களும் அஜர்பைஜானுடனான ஈரானின் எல்லைக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் தப்ரிஸ் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டது. ரைசி, அப்துல்லாஹியன், மூன்று ஈரானிய அதிகாரிகள், ஒரு இமாம் மற்றும் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் உட்பட மொத்தம் ஒன்பது பேர் அந்த ஹெலிகாப்டரில் இருந்தனர். மூன்று அதிகாரிகளில் ஒருவர் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் கவர்னர் மாலேக் ரஹ்மதி ஆவார். விபத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அவைகள் முழுமையாக சிதைந்திருப்பதால் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.