இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
இந்தோனேசியாவில் புதன்கிழமை ருவாங் எரிமலை வெடித்து சிதறியதால் வானில் ஆயிரக்கணக்கான அடி உயரம் வரை சாம்பல் பரவியது. அதனால், இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இந்தோனேசியாவின் பல பகுதிகளில் விடப்பட்ட சுனாமி எச்சரிக்கை காரணமாக 11,000க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். சுலவேசி தீவின் வடக்குப் பகுதியில் உள்ள எரிமலையில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது ஐந்து பெரிய வெடிப்புகள் ஏற்பட்டதாக இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் பேரிடர் தணிப்பு மையம் தெரிவித்துள்ளது. எனவே, உயர்ந்த எரிமலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை குறைந்தது 800 குடியிருப்பாளர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறினர்
இந்தோனேசியா விமான நிலையம் மூடல்
இந்தோனேசியாவின் மவுண்ட் ருவாங் புதன்கிழமை பல முறை வெடித்தது. எனவே, உயர்ந்த எரிமலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த எரிமலை ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் எரிமலைக்குழம்புகளை உமிழ்ந்தது. இதனால், அருகிலுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர். மவுண்ட் ருவாங் வடக்கு சுலவேசி மாகாணத்தில் அமைந்துள்ளது. இந்த பகுதி எரிமலை வெடிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ள ஒரு பகுதியாகும். இது முதலில் செவ்வாய்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 9:45 மணிக்கு வெடித்தது. பின்னர் புதன்கிழமை முழுவதும் நான்கு முறை வெடித்தது. எனவே, ருவாங் எரிமலையிலிருந்து குறைந்தது 6 கிலோமீட்டர் (3.7 மைல்) தொலைவில் இருக்குமாறு அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளையும் மற்றவர்களையும் வலியுறுத்தியுள்ளனர். ருவாங்கின் தொடர்ச்சியான வெடிப்புகளுக்குப் பிறகு அதிகாரிகள் இந்தோனேசியா விமான நிலையத்தையும் மூடியுள்ளனர்.