Loading...
7.7 ரிக்டர் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை! இந்தோனேசியாவில் 20 பேர் உயிரிழப்பு; மக்கள் பீதி
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

7.7 ரிக்டர் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை! இந்தோனேசியாவில் 20 பேர் உயிரிழப்பு; மக்கள் பீதி

எழுதியவர் Sekar Chinnappan
Aug 15, 2026
01:53 pm

செய்தி முன்னோட்டம்

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள புளோரஸ் தீவில் சனிக்கிழமை காலை 5.58 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் இதுவரை குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள 2 நபர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

சுனாமி எச்சரிக்கை

நிலநடுக்கத்தின் மையம் மற்றும் சுனாமி எச்சரிக்கை

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவல்படி, இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள என்டே நகரத்திலிருந்து 68 கி.மீ தொலைவில் இதன் மையம் அமைந்திருந்தது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் 0.5 மீட்டர் முதல் 3 மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்பக்கூடும் எனச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது கடலோரப் பகுதிகளில் 19 முதல் 30 செமீ உயரத்திற்கு அலைகள் கண்டறியப்பட்டுள்ளன.

மீட்பு நடவடிக்கை

மக்கள் பீதி மற்றும் மீட்பு நடவடிக்கைகள்

நிலநடுக்க அதிர்வால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் பலத்த சேதமடைந்தன.

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து மௌமேரே நகர மக்கள் பாதுகாப்பான உயரமான இடங்களுக்குப் புறப்பட்டு சென்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நோயாளிகளும் அச்சத்தில் வெளியேறினர். கடலோர நீர்மட்டம் உள்வாங்கிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

இந்தோனேசியா பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்திருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் மற்றும் சுனாமி பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT