மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் தலைவன் 'எல் மெஞ்சோ' கொலை: பற்றி எரியும் மாகாணங்கள்!
செய்தி முன்னோட்டம்
மெக்சிகோவின் முன்னணி போதைப்பொருள் கடத்தல் தலைவனான 'எல் மெஞ்சோ' (El Mencho) என அழைக்கப்படும் நெமேசியோ ஒசெகுவேரா, அமெரிக்காவின் ஆதரவுடன் நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து, மெக்சிகோவின் பல மாகாணங்களில் வன்முறை வெடித்துள்ளதால், அங்குள்ள இந்தியக் குடிமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மெக்சிகோவில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஜாலிஸ்கோ பகுதியில் நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலில் பலத்த காயமடைந்த எல் மெஞ்சோ, சிகிச்சைக்காக மெக்சிகோ சிட்டிக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார். உலகின் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவரான இவரது மரணத்திற்கு பழிவாங்கும் நோக்கில், அவரது 'ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்' (CJNG) கும்பலைச் சேர்ந்தவர்கள் நெடுஞ்சாலைகளை முடக்கியும், வாகனங்கள் மற்றும் கடைகளுக்குத் தீ வைத்தும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அறிவுறுத்தல்
தூதரகத்தின் அறிவுறுத்தல்கள்
வன்முறை தீவிரமடைந்துள்ள ஜாலிஸ்கோ, தமுலிபாஸ், மிச்சோகன், குரேரோ மற்றும் நியூவோ லியோன் ஆகிய மாநிலங்களில் உள்ள இந்தியர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கூட்டமான இடங்களைத் தவிர்க்கவும், பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. "உள்ளூர் ஊடகச் செய்திகளைக் கூர்ந்து கவனிக்கவும், அவசர காலங்களில் 911 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும். மேலும், தூதரகத்தின் உதவிக்காக +52-55-4847-7539 என்ற எண்ணை அழைக்கலாம்" என்று இந்தியத் தூதரகம் தனது X பதிவில் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலை
பற்றி எரியும் மெக்ஸிகோவின் தற்போதைய நிலை
மெக்சிகோவின் பல பகுதிகளில் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன், சுற்றுலாத் தலங்களிலும் பதற்றம் நிலவுகிறது. ஜாலிஸ்கோ ஆளுநர் மற்றும் மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் ஆகியோர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். எல் மெஞ்சோவின் மறைவைத் தொடர்ந்து, போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே அதிகாரப் போட்டி காரணமாக மேலும் வன்முறை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.